ராமசாமி கருத்தரங்கைப் புறக்கணித்தார்; நஜிப்புடன் வாதிட விரும்புகிறார்

இந்தியர் விவகாரங்கள் மீதான ஒரு கருத்தரங்கை நடத்தும் திட்டத்தை பினாங்கு துணை முதல்வர் II பி.ராமசாமி கண்டனம் செய்துள்ளார். அது, சமூகத் தலைவர்களைத் தங்களுக்குள் மோதவைத்து வேடிக்கை பார்க்கும் ஒரு முயற்சி என்றவர் வருணித்தார்.

மலேசிய இந்திய வணிகர் சங்கம்(மீபா) ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் அக்கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் பாரிசான் நேசனல் மற்றும் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

இந்திய தலைவர்கள் அதில் கலந்துகொண்டு வாதிடுவதில் பொருளில்லை ஏனென்றால்  சமூகத்தின் இன்றைய இருண்மை நிலைக்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்லர் என்று ராமசாமி கூறினார்.

அம்னோதான் அதற்குப் பொறுப்பு என்று கூறிய அவர், அதனால் பக்காத்தானுக்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்குமிடையில் ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்ய வேண்டுமாய் ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

“இந்தியர்கள் பற்றி இந்தியர்கள் ஏன் வாதிட்டுக்கொள்ள வேண்டும்? நஜிப்புடன் வாதிட விரும்புகிறேன், ஏனென்றால் இந்தியர்களின் பின்தங்கிய நிலைக்கு அம்னோதான் காரணம்”, என்று பினாங்கில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அக்கருத்தரங்கம் “இந்தியர்களின் மனத்தையும் வாக்குகளையும் கவரும் களமாக விளங்கும்” என்றும் அரசியலின் இருதரப்பு முக்கிய புள்ளிகளும் இந்திய என்ஜிஓ-களும் அதில் கலந்துகொள்வர் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆளும் கட்சிக் கூட்டணியிலிருந்து மஇகா தலைவர் ஜி.பழனிவேல், பிபிபி தலைவர் எம்.கேவியஸ், கெராக்கான் செனட்டர் ஏ.கோகிலன் பிள்ளை முதலானோரும். மாற்றரசுக் கட்சியிலிருந்து டிஎபியின் டாக்டர் ராமசாமி, பிஎஸ்எம்-மின் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் போன்றோரும் அதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை’

டிஏபி பன்னாட்டுப் பிரிவுச் செயலாளருமான ராமசாமி, கருத்தரங்குக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதனையும் தாம் பெறவில்லை என்றார். செய்தித்தாளைப் பார்த்துத்தான் தம் பெயரும் அதில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்துகொண்டதாக அவர் தெரிவித்தார்.

கருத்தரங்கில் கலந்துகொள்வோர் பட்டியலில் தம் பெயர் இருப்பதை அறிந்து “அதிர்ச்சி அடைந்த”தாக அவர் சொன்னார். ஏனென்றால் அதில் கலந்துகொள்வதை  அவர் உறுதிப்படுத்தவில்லை.

“மூன்று நாள்களுக்குமுன் மீபாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்களிடம் ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவித்தேன்”, என்றாரவர்.

பயம் இல்லை

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.மனோகரன் முன்னதாக ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலவில்லை என்று தெரிவித்தார்.

“மேலும், இதற்கான அழைப்பு மின்னஞ்சல் வழி செப்டெம்பர் 4 இல்தான் கிடைத்தது. கடைசி நேரத்தில் அழைப்பு அனுப்பப்பட்டதால், இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்வதில் ஏதும் பிரச்னை இருக்கிறதா என்பது தெரியவில்லை.

“எது எப்படியிருப்பினும், ஒன்றை திட்டவட்டமாக கூற விரும்புகிறேன். இதில் பங்கு பெறுவதில் எங்களுக்கு பயம் ஏதும் இல்லை”, என்றார் மனோகரன்.
 

“இப்போது என் அனுமதியின்றி என் பெயரையும் சேர்த்துக்கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. இது, அந்நிகழ்வை, நான் விரும்பவில்லை என்றாலும்கூட அதை நான் ஏற்றுக்கொண்டிருப்பது போலவும் அதில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டிருப்பதுபோலவும் ஒரு தோற்றத்தைத் தருகிறது.

“விவாதமிட நான் அஞ்சவில்லை. ஆனால், முதுகெலும்பில்லாத மஇகா தலைவர்களுடனோ பிஎன்னின் மற்ற இந்திய தலைவர்களுடனோ வாதமிடுவதில் பொருளில்லை. இந்தியர்களின் இன்றைய நிலைக்கு அவர்கள் காரணமில்லை”, என்றவர் வலியுறுத்தினார்.

கருத்தரங்குக்கு வருவோரிடம் ரிம100 கட்டணம் வசூலிக்கப்படுவதும் ராமசாமிக்குப் பிடிக்கவில்லை.

பொது விவாதம் எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொள்ள ஆயத்தமாக இருப்பதாய்க் கூறிய ராமசாமி, கருத்தரங்குக்கு வருவோரிடம் ரிம100 வசூலிப்பது “ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று” என்றார்.

“குறிப்பிட்டவர்கள்தான் அதற்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்களா? மஇகா கட்டணத்தைச் செலுத்தி அதன் தலைவர்களை ஊக்குவிக்க அதன் உறுப்பினர்களைக் கொண்டு வந்து நிரப்பிவிடலாம்தானே”, என்றவர் குத்தலாகக் குறிப்பிட்டார்.

TAGS: