ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் இன்னும் சில மாகாணங்களிலும் தாலிபன் இயக்கத்தினர் ஒருங்கிணைந்த வகையில் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
வெளிநாட்டுத் தூதரகங்கள், நேட்டோவின் தலைமையகம், ஆப்கான் நாடாளுமன்றம் என முக்கிய பல இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்கள் கடந்த ஆறுமாதங்களில் அங்கு நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல்களாக கருதப்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களில் குறைந்தது 14 ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர், காயமடைந்துள்ள 23 பேரில் ஆப்கானிய காவல்துறையினர் 14 பேரும் 9 பொதுமக்களும் அடங்குகின்றனர். காபூலில் மட்டும் 7 இடங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் தூதரகத்தின் காவலாளிகள் கண்காணிப்பு கோபுரத்தின்மீது இரண்டு ராக்கெட்டுகள் தாக்கியுள்ளதாகவும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளின் வீடொன்றின்மீது இன்னொரு ராக்கெட் குண்டொன்று வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு காபூல் பகுதியில் பிரெஞ்சுப் படை வாகனத் தொடரணியின் மீதும் கிரேக்க இராணுவ படைத் தளமொன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பதிலுக்கு பிரான்ஸ் மற்றும் கிரேக்கப் படைகளும் சரமாரியான இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
மேற்கு காபூலில் நாடாளுமன்றக் கட்டடம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆயுததாரிகள் நாடாளுமன்றத்தைத் தாக்கமுற்பட்ட போது, அங்கிருந்த எம்பிகளும் படையினருடன் சேர்ந்துகொண்டு பதில் துப்பாக்கித் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யத் தூதரகத்தின்மீதும் ராக்கெட் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜேர்மனி தூதரகத்தின் மேலாக புகை கிளம்பிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வந்த தகவல்கள் உறுதிப்படுத்தின.
அமெரிக்கத் தூதரகத்தின் மிக அருகில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் தூதரகம் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜலலாபாத் மாகாணத்தில் கிழக்கு நகரொன்றில் தற்கொலை குண்டுதாரிகள் விமான நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியிருப்பதாக காவல்துறை கூறுகிறது. அங்கு அமெரிக்க விமானப் படைத்தளம் தாக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஹமீட் கர்சாயின் மாளிகை அமைந்துள்ள அதியுயர் பாதுகாப்பு வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தாலிபன் கூறுகிறது. ஆனால் அதனை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
‘மேற்குலக சக்திகளின் மீது தாலிபனின் வசந்த காலத் தாக்குதல்களின் ஆரம்பகட்டம் தான் இது’ என்று தாலிபன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, ஆப்கான் எல்லையில் – பாகிஸ்தானின் வடமேற்கே சிறைச்சாலை ஒன்றின் மீது ஞாயிறு அதிகாலை தமது போராளிகள் 100 பேர் தாக்குதல் நடத்தி சுமார் 400 கைதிகளை விடுவித்துள்ளதாகவும் தாலிபன்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.