டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி

இந்தியாவின் டில்லி உயர் நீதிமன்ற வாளாகத்தினுள் இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று காலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயில் அருகே பயங்கர ஒலியுடன் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் 9பேர் பலியானார்கள். மேலும் 45- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனையடுத்து நீதிமன்றம் முழுவதும் பரபரப்பு ‌ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மருத்துவ வண்டி விரைந்து வந்து காயமடைந்தவர்களை பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றது. 

சம்பவம் குறித்து, உள்துறை அமைச்சகம் நிலைமை குறித்து விவாதித்து வருகிறது. டில்லி காவல்துறை ஆணையர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். ஒரு பெட்டியில் இந்த குண்டு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை ஆய்வு செய்ய தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் தேசிய பாதுகாப்புப்படையினர் (என்.எஸ்.ஜி), தேசிய புலனாய்வு ஏஜென்சியினர் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சம்பவ இடத்தினை ஆய்வு செய்து வருகின்றனர்.