பினாங்கு மஇகா தலைவர் சுப்பையா காலமானார்

பினாங்கு மஇகா தலைவர் பிகே சுப்பையா, பட்டர்வொர்த் பாகான் அஜாமில் உள்ள தாமான் மெராந்தியில் உள்ள தமது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 63.

அந்தத் தகவலை அந்த மாநில மஇகா இளைஞர் தலைவர் ஜே தீனா தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார். சுப்பையா காலமாகி விட்டதாக இன்று அதிகாலை மணி 5.30 அளவில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தமக்குத் தொலைபேசி வழி தெரிவித்ததாக அவர் சொன்னார்.

சுப்பையா மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

 பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை பிராய் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள அவர், 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில மஇகா தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செனட்டாராக நியமனம் பெற்றார்.

வெள்ளிக்கிழமை அவரது நல்லடக்கச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுப்பையா காலமான செய்தி அறிந்து தாம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தேவான் நெகாரா உறுப்பினரான  செனட்டர் பூன் சோம் இனோங் தெரிவித்துள்ளார்.

தாம் சுப்பையாவை இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் சந்தித்ததாகவும் ஒன்றாக உணவும்  உட்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

“அவர் நன்றாக இருந்தார். நாங்கள் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தோம். தேவான் நெகாராவில் நான் ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன்,” என்றார் அவர்.
பெர்னாமா