பெர்சே 3.0 பேரணிக்கு முந்திய கூட்டம் ஒன்று கோலாலம்பூர் கம்போங் பாருவில் சேறும் சகதியும் நிறைந்திருந்த திடல் ஒன்றில் நேற்றிரவு நிகழ்ந்தது.
அந்தக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அப்துல் காபார் பாபாவின் புதல்வரான தாம்ரின் அப்துல் காபா பேசினார்.
தூய்மையான, நேர்மையான தேர்தல்களைக் கோரி நடத்தப்படும் பெர்சே 3.0 பேரணிக்கு கூட்டத்தினர் ஆதரவு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்ட போது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாம்ரின் தொடர்ந்து கூறினார்: ” நான் ஒரு விளக்கம் தர வேண்டியுள்ளது. நான் அம்னோ உறுப்பினரே.”
அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஈராயிரத்துக்கும் அதிகமான மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
“ஆனால் இன்று நான் உங்களுடன் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளேன். காரணம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தல் நடைமுறைகளில் தில்லுமுல்லு செய்யப்படுவதை என்னால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடியாது,” என்றார் அவர்.
1986ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக தாம் மேடையில் பேசுவதாக தாம்ரின் கூறிக் கொண்டார்.
அவர் கடைசியாக 2010ம் ஆண்டு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் செராமா நிகழ்வு ஒன்றில் காணப்பட்டார். ஆனால் அப்போது விருந்தினராகக் கலந்து கொண்டார். சொற்பொழிவு நிகழ்த்தவில்லை.
ஏப்ரல் 28ம் தேதி மெர்தேக்கா சதுக்கத்தில் பெரிய அளவில் நிகழும் என எதிர்பார்க்கப்படும் பெர்சே 3.0 குந்தியிருப்புப் போராட்டத்துக்கு முன்னோடியாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் நேற்றைய கம்போங் பாரு நிகழ்வும் ஒன்றாகும்.
அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் பெர்சே-யின் மஞ்சள் நிற டி சட்டையை அணிந்திருந்தனர். ஈரத் தரையில் அவர்கள் பாய்களில் அமர்ந்து கொண்டு 31 போராளிகள், மாணவர் தலைவர்கள், அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளை செவிமடுத்தனர்.
தாம்ரின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தையும் அவரது தந்தையின் நிர்வாகத்தையும் ஒப்பிட்டுப் பேசினார்.
“1969ம் ஆண்டு மே 13ம் தேதி கலவரங்களைத் தொடர்ந்து தேசிய நடவடிக்கை மன்றத்தின் தலைவர் என்ற முறையில் முழு அதிகாரத்தை ஏற்ற அப்துல் ரசாக் பின்னர் சுய விருப்பத்துடன் அதிகாரத்தை ஒப்படைத்தார்.”
“ஆனால் இன்று பொதுத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நமது நாடு அந்நியர்களிடம் விற்கப்படுவதைக் கண்டு நான் ஆழ்ந்த வருத்தமடைந்துள்ளேன்,” என்றார் தாம்ரின்.
வாக்குகளுக்கு ஈடாக பத்தாயிரக்கணக்கான அந்நியர்களுக்கு உடனடி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கூறும் ஊடகத் தகவல்களை அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியக் குடிமகனாக உள்ள பாகிஸ்தானிய வம்சாவளி டாக்ஸி ஒட்டுநரைக் கூட தாம் சந்திக்க நேரிட்டதையும் தாம்ரின் தமது உரையில் குறிப்பிட்டார்.
அந்தக் கூட்டத்தில் அம்னோ மூத்த உறுப்பினரும் குவா மூசாங் எம்பி-யுமான தெங்கு ரசாலி ஹம்சா கூட்டத்தினருக்கு அனுப்பியுள்ள செய்தியையும் அவர் வெளியிட்டார்.
“பெர்சே செய்வதை தாம் ஆதரிப்பதாக தெங்கு ரசாலி தெளிவாகக் கூறியுள்ளார். இலவசக் கல்விக்கு வகை செய்யும் பொருட்டு PTPTN என்ற தேசிய உயர் கல்விக் கடனுதவித் திட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும். அன்வாரும் அவரது தோழர்களும் விடுத்துள்ள வேண்டுக்கோளையும் அவர் ஆதரிக்கிறார். நமது நட்டுக்கு அது சிறந்த முதலீடு ஆகும்,” என்றார் அவர்.
“தேர்தலை அவர்கள் திருடுவதற்கு அனுமதிக்க வேண்டாம்”
அந்தக் கூட்டத்தில் இன்னொரு அதிர்ச்சியும் கொடுக்கப்பட்டது. முன்னாள் தகவல் அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் அந்தக் கூட்டத்தில் பேசியது தான் அது. “தேர்தலை பிஎன் திருடுவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என அவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.
“நான் 56 ஆண்டுகளாக அம்னோ உறுப்பினராக இருந்துள்ளேன். அது உறுப்பினர்களுக்குச் சொந்தமான கட்சியாக இருந்தது. அதன் தலைவர்கள் தூய்மையானவர்களாக இருந்தனர். ஆனால் கால ஒட்டத்தில் அது குறிப்பிட்ட சிலரது பாட்டன் கட்சியாகி விட்டது.”
“அவர்கள் அதைத் திருடினர். இதைத் திருடினர். அதனால் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. என் அரசியல் வாழ்க்கையின் உச்சக் கட்டத்தில் நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்டேன்,” என்றார் அவர்.
“நான் விலகிய பின்னர் அமைதியாக இருந்தேன். ஆனால் திருடுவது மோசமடைந்தது. மில்லியன்கள் போதுமானதாக இல்லை. இப்போது பில்லியன் கணக்கில் நிகழ்கிறது. என்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. இறுதியில் கட்சியை விட்டு வெளியேறினேன்.”
ஊடகங்களில் நியாயமான இடம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்து அரசாங்க நிர்வாகம், போலீஸ், இராணுவம் ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்தும் வரையில் தேர்தல்கள் நடத்தப்படக் கூடாது என அப்துல் காதிர் வலியுறுத்தினார்.
“ஊடகங்களில் நியாயமான இடம் கிடைக்காத வேளையில் 2008ல் வாக்களித்த மக்களில் 48 விழுக்காட்டினர் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்ததை மறந்து விட வேண்டாம். நாட்டின் பாதிப் பகுதியில் அது இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அது ஜனநாயகம் அல்ல.”
2007, 2011 பெர்சே பேரணிகளை ரகசியமாக ஆதரித்ததாகக் கூறிக் கொண்ட அப்துல் காதிர் ஏப்ரல் 28ம் தேதி நிகழ்வில் பங்கு கொள்ளப் போவதாக உறுதி அளித்தார். பின்னர் அவருக்கு பெர்சே டி சட்டை ஒன்று கொடுக்கப்பட்டது. அவர் அதனை அணிந்து கொண்டார்.
பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, பிகேஆர் உதவித் தலைவர்களான நுருல் இஸ்ஸா அன்வார், தியான் சுவா, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின், பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர்களான மரியா சின் அப்துல்லா, ஹிஷாமுடின் ராயிஸ், ஹிம்புனான் ஹிஜாவ் நடவடிக்கைக் குழு உறுப்பினர் கிளிமெண்ட் சின், Solidariti Mahasiswa Malaysia அமைப்புத் தலைவர் சாபுவான் அனாங் ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார்கள்.