தென்னமரம் தோட்ட நிகழ்வில் மக்கள் “நாய்கள், பிச்சைக்காரர்கள்” போல் நடத்தப்பட்டனர்

கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 16) பத்தாங் பெர்ஜுந்தை, தென்னமரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய ஒரே மலேசியா உதவித் திட்டம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சுமார் 500 பஸ்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட இந்தியர்கள் “நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்கள்” போல் நடத்தப்பட்டனர் என்று தாமான் தென்னமரம்  குடிமக்கள் நேற்று குமுறினர்.

“அத்திட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர்களை ‘நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்கள்’ போல் நடத்தினர் என்றும் அங்கு கூடியிருந்த கூட்டத்தின் காரணமாக மூன்று முதிய வயதினரான பெண்கள் இறந்துபோனதாக  நம்பப்படுகிறது”, என்று அத்தாமான் மக்களைச் சந்தித்த மலேசிய தமிழர்கள் முன்னேற்ற மன்றத்தின் (மதமும) தலைவர் எ. கலைமுகிலன் கூறுகிறார்.

நேற்று பிற்பகல் மணி 3.00 அளவில் தாமான் தென்னமரத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர் என்பதை கலைமுகிலனுடன் இருந்த டி. செந்தியன் உறுதிப்படுத்தினார். இவர் மதமுமவின் ஒருங்கிணைப்பாளர்.

உள்ளூர் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்வுக்கு ஏன் வெளியூர்களிலிருந்து மக்களைக் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் கேட்டனர்.

 ஜப்பானியர்களைபோல் ஆள் பிடிப்பு

சிறம்பான், சபாக் பெர்ணம், ஜோகூர், கிள்ளான, பூச்சோங், பத்துமலை போன்ற பல இடங்களிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர் என்று கூறிய செந்தியன், பூச்சோங்கிலிருந்து வந்த பஸ்சில் வந்தவர்களில் தாமும் ஒருவர் என்றார்.

தாம் கண்டதும் கேட்டதும் தமக்கு சயாம் மரண ரயில்வே திட்டத்திற்கு ஜப்பானியர்கள் மக்களைப் பார்த்த இடத்தில் எல்லாம் பிடித்து வண்டியிலேற்றி சென்றதை ஞாபகப்படுத்தியது என்றார் செந்தியன்.

“மார்க்கெட்டிற்கு பொருள்கள் வாங்கச் சென்றவர்களை அங்கேயே பிடித்து பஸ்சில் ஏற்றிகொண்டு வந்துள்ளனர்”, என்று செந்தியன் கூறினார்.

காலை மணி 11.00 க்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று மக்களிடம் கூறப்பட்டது. ஆனால், மாலை மணி 5.00 க்குதான் அது தொடங்கியது என்று உள்ளூர் இளைஞர்கள் கூறியதாக கலைமுகிலன் தெரிவித்தார்.

“தமிழர்களை அவமதிக்காதீர்”

“நான் அந்த இடத்தில் இருந்தேன். பஸ்சிலிருந்து இறக்கிவிடப்பட்ட இடத்திலிருந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு இரண்டு மணி நேரம் நடக்க வேண்டும். அந்த இடம் எங்கே என்பதுகூட தெரியவில்லை.
“கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள். அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள், குறிப்பாக இனிப்பு நீர் பிரச்னை, இருந்தன. இவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்”, என்று செந்தியன் மேலும் கூறினார்.

கலைப்புற்று மயங்கி விழுந்து இறந்துவிட்ட மாது ஒருவர் உடனடியாக வண்டியிலேற்றப்பட்டு அவ்விடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டபோது பலர் “sudah mathi”  என்று கூறியதாக செந்தியன் கூறினார்.

தாமான் தென்னமரத்தில் நடந்த சந்திப்பில் பங்கேற்றவர்களில் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்திய பலரில் பெண்களும் அடங்குவர் என்று கூறிய செந்தியன், ஒரு பெண், “தமிழர்கள் அவமதிக்கப்பட்டனர், தமிழர்களை அவமதிக்காதீர்”, என்று ஆவேசமாக கூறினார் என்றார்.

பாரிசானின் போக்கு குறித்து வெகு விரைவில் ஒரு பெரும் பேரணியை பத்தாங் பெர்ஜுந்தையில் நடத்தப்போவதாக எ. கலைமுகிலன் கூறினார்.