மெர்தேக்கா சதுக்கத்தில் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினர்

மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துள்ள மாணவர்களை அடையாளம் தெரியாத குண்டர் கும்பல் ஒன்று இன்று அதிகாலையில் தாக்கியது. அப்போது பல மாணவர்கள் அடிக்கப்பட்டனர். அதனால் மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நகர மய்யத்தில் அமைந்துள்ள அந்த சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை முதல் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்லா கூடாரங்களையும் அந்த குண்டர் கும்பல் நாசப்படுத்தியது.

அதிகாலை மணி 2.45 வாக்கில் அந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு நிகழ்ந்ததாக மலேசிய இளைஞர் மாணவர் இயக்க (Dema) ஒருங்கிணைப்பாளர் ஹெங் கியா சுன் மலேசியாகினியிடம் கூறினார்.

அந்தக் கூடாரங்களில் இருந்த மாணவர்களை 50 முதல் 70 பேர் வரையிலான குண்டர்கள் சுற்றி வளைத்துக் கொண்டு மாணவர்களுடைய ஆத்திரத்தை மூட்டி விட முயன்றதுடன் மாணவர்களையும் தாக்கினர்.

அவர்கள் பல மாணவர்களை அடித்ததுடன், இலவசக் கல்வி கோரி நடத்தப்படும் ஆட்சேபத்தின் ஒரு பகுதியாக அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த 10 கூடாரங்களையும் நாசப்படுத்தினர்.

கேமிராக்களும் கைத்தொலைபேசிகளும் சேதமடைந்தன

மாணவர்கள் அமைதியாக இருந்தனர் என்றும் திருப்பித் தாக்கவும் இல்லை என்றும் ஹெங் சொன்னார்.

அந்தத் தாக்குதலை கேமிராக்கள், ஒளிப்பதிவுக் கருவிகள், கைத்தொலைபேசிகள் வழியாக பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது தாக்குதல்காரர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் சில ஒளிப்பதிவு கருவிகளை சேதப்படுத்தினர்.

அந்தப் பகுதியில் 12க்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டிருந்ததாகவும் மாணவர் தலைவர்கள் உதவி செய்யுமாறு மன்றாடும் வரையில் அவர்கள் தலையிடவில்லை என்றும் ஹெங் தெரிவித்தார்.

போலீசார்  வந்ததும் குண்டர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டனர். தாக்குதலை நடத்தியவர்களில் ஒரிருவர் கைது செய்யப்பட்டதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

தேசிய உயர் கல்வி நிதியான PTPTN ரத்துச் செய்யப்பட வேண்டும் என போராட்டம் நடத்தும் அந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்தச் சம்பவத்தினால் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

அவர்கள் உடனடியாக கூட்டம் நடத்தி தொடர்ந்து மெர்தேக்கா சதுக்கத்தில் இருக்க முடிவு செய்தார்கள்.

“நாங்கள் ஒருவரை ஒருவர் பாதுகாப்போம். குண்டர்தனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்,” என அவர்கள் கூறினர்.

இன்று போலீஸில் புகார் செய்யப்படும்.