கடந்த 22 ஆண்டுகளில் நிகழ்ந்திராத வகையில் நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு 12 மணி அடித்ததும் நேர ஒட்டத்தை முடக்கியது.
தேங்கியிருக்கும் மசோதாக்களையும் பிரேரணைகளையும் நிறைவேற்றுவதற்கு உதவியாக அவ்வாறு செய்யப்பட்டது.
“அவையில் இருந்த இலக்கவியல் கடிகாரங்கள் அனைத்தும் நின்று விட்டன,” என்று ராசா எம்பி அந்தோனி லோக் கூறினார்.
மக்களவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்றைக்குள் எஞ்சியுள்ள அரசாங்க அலுவல்களான- திருத்த மசோதா ஒன்று, ஐந்து பிரேரணைகள்- ஆகியவற்றை மக்களவை நிறைவேற்றுவதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும்.
2012ம் ஆண்டுக்கான மூலதனச் சந்தைகள், சேவைகள் (திருத்தம்) மசோதா மீது விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்த போது இலக்கவியல் கடிகாரங்கள் நிறுத்தப்பட்டன.
பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாத சூழ்நிலைகளில் அவை தனது விதிமுறைகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கும் நிரந்தர ஆணை 90(2)ன் கீழ் ஒரு தீர்மானத்தை பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் கொண்டு வந்தார்.
“நாம் இன்று முடிக்க வேண்டிய வேலைகளை அவை முடிப்பதற்கு உதவியாக நிரந்தர ஆணை 12ன் அமலாக்கத்தை நிறுத்தி வைப்பது” அந்தத் தீர்மானத்தின் நோக்கமாகும்.
நீண்ட கூட்டம்
நாடாளுமன்றம் தொடங்கும் முடியும் நேரத்தை நிரந்தர ஆணை 12 கட்டுப்படுத்துகிறது.
மக்களவை, நேரம் ஒடுவதை புறக்கணித்து விட்டு தான் முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் நிறைவடையும் வரையில் தொடருவதற்கு வகை செய்வதே அந்த நிறுத்தத்தின் அர்த்தமாகும்.
நாடாளுமன்றம் தனது அலுவல்களை அன்றைய தினமே முடிக்க வேண்டும் என்று கூறும் நிரந்தர ஆணை 12(3)ஐ தமது பிரேரணை நிறுத்தி வைத்ததாக நஸ்ரி பின்னர் விளக்கினார்.
“ஆனால் நாங்கள் முழு நிரந்தர ஆணைகளையும் ரத்துச் செய்தோம்,” என்றார் அவர்.
கிளந்தானில் அவசர காலத்தைப் பிரகடனம் செய்வது மீது 1990லும் 1977லும் மக்களவையில் விவாதம் நிகழ்ந்த போது இது போன்று கடைசியாக செய்யப்பட்டதாக நஸ்ரி தெரிவித்தார்.
மக்களவையில் நள்ளிரவு மணி 12 வாக்கில் 34 பிஎன் எம்பி-க்களும் 17 பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்களும் சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் இருந்தனர்.