ஜைனுடின் மைடின்: பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஊடகங்களுக்கு தடையாக இருக்கும் “மறைவான கரங்கள்”

முன்மொழியப்பட்டுள்ள மலேசிய ஊடக மன்றம் ஊடகச் சுதந்திரம் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் தங்கள் கடமைகளின் போது பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் எதிர்நோக்கும் அச்சுறுத்தலையும் தீர்க்க உதவும் சிறந்த தேசிய பத்திரிக்கையாளர் விருதைப் பெற்றுள்ள ஜைனுடின் மைடின் கூறுகிறார்.

மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் நோக்கம் கொண்ட சட்டப்பூர்வ விவகாரங்களையும் அந்த ஊடக மன்றம் கவனிக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

பெரிய நிறுவனங்கள், பெரிய வர்த்தகங்கள், பெரிய தொழில்கள், விளம்பரதாரர்கள் ஆகிய தரப்புக்கள் தங்கள் நலனுக்கு அல்லது தோற்றத்துக்கு பாதகமாக இருக்கும் செய்திகளை வெளியிடாமல் தடுக்கும் “மறைவான கரங்கள்” என அந்த முன்னாள் தகவல் அமைச்சர் கூறிக் கொண்டார்.

“வர்த்தகங்கள் துரிதமாக வளர்ச்சி காணும் போது அபாயங்களும் பெரிதாகின்றன. என்றாவது ஒரு நாள் பெரிய வர்த்தக, தொழில் நிறுவனங்கள் ஊடகங்களையும் அரசாங்கத்தையும் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கின்ற நாள் கூட வரலாம்,” என அவர் கோலாலலம்பூரில் நேற்றிரவு விடுத்த அறிக்கை கூறியது.

உத்துசான் மலேசியாவின் முன்னாள் தலைமை ஆசிரியருமான ஜைனுடின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 1984ம் ஆண்டுக்கான அச்சுக் கூட, வெளியீடுகள் சட்டத்திருத்தங்கள் பற்றிக் கருத்துரைத்தார். அந்தத் திருத்தங்களின் கீழ் இதர பல விஷயங்களுடன் செய்திப் பத்திரிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதில் உள்துறை அமைச்சருக்கு உள்ள “முழு அதிகாரத்தை” நீக்குகிறது.

அந்த ‘மருட்டல்கள்’ காரணமாக பத்திரிக்கை ஆசிரியர்களும் வெளியீட்டாளர்களும் ஆதாயத்துக்காக பயனீட்டாளர்களுடைய நலன்களை புறக்கணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் பத்து ஆண்டுகளுக்கு நாளேடு ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்த போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக சில செய்திகள் இல்லாததால் பல மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள விளம்பரங்களை மீட்டுக் கொள்ளப் போவதாக விளம்பரதாரர்களின் முகவர்களிடமிருந்து எனக்கு மருட்டல்கள் வந்துள்ளன.”

சுதந்திரமானவை என்று கூறிக் கொள்ளும் சில செய்தி இணையத் தளங்கள் உண்மையில் தோற்றுப்போன அரசியல்வாதிகளின் அரசியல் கருவிகளாக இயங்குவதாகவும் ஜைனுடின் கூறிக் கொண்டார்.

பெர்னாமா