அரச இசை நிகழ்ச்சியின் போது மூன்று கூடாரங்களை வைத்திருக்க டிபிகேஎல் அனுமதி

இலவசக் கல்வி கோரி மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடருகிறது.

அந்த சதுக்கத்தில் நாளை இரவு அரச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் மூன்று கூடாரங்களை அமைத்துக் கொள்ள DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

அந்தத் தகவலை Bangkit Malaysia அமைப்பின் தலைவர் முகமட் ஷாஹிட் ஜைனி வெளியிட்டார்.

அந்த மூன்று கூடாரங்களிலும் மெர்தேக்கா சதுக்கத்தில் தாங்கள் முகாமிட்டிருக்கும் வேளையில் தங்களுக்கு கிடைத்த இன்றியாமையாப் பொருட்களும் நன்கொடைகளும் வைக்கப்படும் என்றார் அவர்.

“ஆனால் நாங்கள் யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் நாளை அரச இசை நிகழ்ச்சிக்கு வழி விடுவோம்.”

“சனிக்கிழமை எந்த நிகழ்வையும் நாங்கள் நடத்த மாட்டோம். நாங்கள் அங்கு தொடர்ந்து இருப்போம். அந்த மூன்று கூடாரங்களைத் தவிர வேறு எந்த கூடாரமும் இருக்காது,” என்றார் ஷாஹிட்.

மாணவர்கள் முகாம் அமைத்துள்ள பகுதியில் மாணவர்களுடன் பேச்சு நடத்திய டிபிகேஎல் அதிகாரி ஒருவர் வாய்மொழியாக அந்த உறுதி மொழியை வழங்கியுள்ளதாகவும் அவர் சொன்னார்.

“டிபிகேஎல் எங்களுடன் விவாதிப்பதற்கு உதவியாக எங்கள் நடவடிக்கைகளை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை நாங்கள் டிபிகேஎல்-லுக்கு தொலைநகல் (பேக்ஸ்) மூலம் அனுப்பியுள்ளோம்.  நாங்கள் அதனை ஒர் அனுமதியாக எடுத்துக் கொண்டுள்ளோம்.”

தொடக்கத்தில் கூடாரங்களை அகற்றி  மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற டிபிகேஎல் அதிகாரிகள் முயன்றதுடன் ஒப்பிடுகையில் அதன் இப்போதைய நடவடிக்கை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.”

நாட்டின் 14வது அகோங் அரியணை அமர்ந்ததைக் கொண்டாடும் வகையில் நாளை அரச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

மெர்தேக்கா சதுக்கத்தில் அரச இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பதால் அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா அறிவுரை கூறியதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சி முடிந்த ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து மெர்தேக்கா சதுக்கத்தில் மாணவர்கள் மீண்டும் முகாம்களை அமைத்துக் கொள்வர் என்றும் ஷாஹிட் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் நிகழும் வரையில் மெர்தேக்கா சதுக்கத்தில் தொடர்ந்து இருக்கப் போவதாக மாணவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இதனிடையே அந்தச் சதுக்கத்தில் பேரணியை நடத்த பெர்சே விடுத்த வேண்டுகோளை டிபிகேஎல் நிராகரித்து விட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.