சுப்ரா: போதுமான ஆவணங்கள் இல்லாத அந்த 300,000 பேரைக் கொண்டு வாருங்கள் என்கிறார்

போதுமான ஆவணங்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறப்படும் 300,000 மலேசிய இந்தியர்களை எதிர்க்கட்சிகள் மஇகா-வுக்கு காட்ட வேண்டும் என அந்தக் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார்.

அவ்வாறு காட்டுவதால் மஇகா தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் சொன்னார்.

“எனது பதில் மிகவும் எளிமையானது. பிறப்புச் சான்றிதழ்களும் அடையாளக் கார்டுகளும் இல்லாமல் 300,000 மலேசிய இந்தியர்கள் இருந்தால் அவர்களை எங்களிடம் கொண்டு வாருங்கள். நாங்கள் உதவுகிறோம்,” என்றார் அவர்.

அவர் நேற்று பந்திங்கில் ஜுக்ரா தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.

பிறப்புச் சான்றிதழ்களும் அடையாளக் கார்டுகளும் இல்லாமல் 300,000 மலேசிய இந்தியர்கள் இருப்பதாக பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறிக் கொண்டிருப்பது பற்றி சுப்ரமணியம் கருத்துரைத்தார்.

நேற்று நாடாளுமன்றக் கட்டிட நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தலைமை தாங்கிய சுரேந்திரன் அந்த 300,000 பேரையும் அரசாங்கம் அடையாளம் கண்டு அவர்களுக்கு மை கார்டுகளை வழங்க வேண்டும் எனக் கோரினார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கப்பட்ட மை டாப்தார் (MyDaftar) இயக்கத்தின் போது பொருத்தமான ஆவணங்கள் இல்லாத 15,000 பேரை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்ததாக மனித வள அமைச்சருமான சுப்ரமணியம் சொன்னார்

அவர்களில் 9,529 பேர் மட்டுமே அந்த இயக்கத்தின் போது சம்பந்தப்பட்ட விண்ணப்ப பாரங்களை சமர்பித்தனர்.

2009ம் ஆண்டு தொடக்கம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு மொத்தம் 425 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரமணியம் அந்த நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

“நாங்கள் இவ்வாண்டுக்கு 2012 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டை பெறும் தமிழ்ப் பள்ளிக்களின் பட்டியலைத் தயாரித்துள்ளோம். கொள்முதல் நடைமுறைகள் இறுதி மூடிவு செய்யப்பட்டதும் இன்னும் இரண்டு மாதங்களில் பணிகள் தொடங்கும்,” என்றும் அவர் சொன்னார்.

ஜுக்ரா தமிழ்ப் பள்ளிக்கு 50,000 ரிங்கிட் நன்கொடையையும் சுப்ரமணியம் அப்போது அறிவித்தார்.

பெர்னாமா