மலேசியா ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகளை கொள்முதல் செய்தது தொடர்பிலான பிரஞ்சு நீதிமன்ற விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன் என தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறியிருக்கிறார்.
தமது அமைச்சு அந்த விசாரணைக்குப் பேராளர் யாரையும் அனுப்பாது என்றும் அவர் அறிவித்தார்.
கோலாலம்பூரில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் ஸாஹிட் அவ்வாறு கூறியதாக சீன நாளேடுகள் இன்று செய்து வெளியிட்டுள்ளன.
“நான் ஏன் கலந்து கொள்ள வேண்டும் ? நான் சாட்சி அல்ல. நான் கலந்து கொள்ள வேண்டும் என நீங்கள் விரும்பினால் என செலவுகளுக்கு யார் பணம் கொடுக்கப் போகிறார்கள் ? நான் என் சொந்தப் பணத்தை அல்லது அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை,” என்றார் அவர்.
“அவர்கள் விசாரணையை நடத்தலாம். ஆனால் தற்காப்பு அமைச்சு பிரான்ஸுக்குப் பேராளர்கள் யாரையும் அனுப்பாது. என்றாலும் அங்குள்ள மலேசியத் தூதர் நிலைமையை கண்காணிப்பார் என நான் நம்புகிறேன்,” என்று அவர் சொன்னதாக அந்த நாளேடுகள் செய்தி வெளியிட்டன.
சுவாராம் நடவடிக்கை ‘அரசியல் நோக்கம் கொண்டது’ என்றும் அரசாங்கத்தின் தோற்றத்தைக் கெடுப்பதும் அதன் குறிக்கோள் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டார்
மலேசிய அரசாங்கம் அந்த விவகாரம் மீது நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க மறுத்து விட்டதால் தான் பிரான்ஸில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக சுவாராம் கூறிக் கொள்வது பற்றி அவரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த ஸாஹிட்,” வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை சுவாரமுக்கு உண்டு என்றும் பிரஞ்சு நீதிமன்ற முடிவுகளை தாம் மதிப்பதாகவும்,” சொன்னார்.
“அமைச்சு எப்போதும் சட்டங்களைப் பின்பற்றுகிறது. வெளிப்படையாகவும் செயல்படுகிறது. நாங்கள் சுவாராமுக்கு ஏற்கனவே பதில் அளித்து விட்டோம். ஆனால் அது தொடர்ந்து அந்த விஷயத்தை எழுப்பிக் கொண்டே இருக்கிறது,” என்றார் ஸாஹிட்.
“நாங்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு முடிவே இருக்காது,” என்றும் ஸாஹிட் கூறினார்
நேற்று மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சமர்பித்த சாட்சிய அறிக்கை பாரிஸ் பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதற்கு முன்னதாக அது அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை விசாரணை நீதிபதி Roger Le Loire முன்னிலையில் வைத்தது.
2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கத்துக்கு இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் விற்கப்பட்டதின் தொடர்பில் உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு சட்டவிரோதமாக தரகுப் பணம் கொடுத்ததாக கூறப்படுவது மீது 2010ம் ஆண்டு சுவாராம் தற்காப்பு தளவாடங்களை தயாரிக்கும் பிரபல பிரஞ்சு டிசிஎன்எஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
சாத்தியமான சாட்சிகள் என சுவாராம் முன்மொழிந்த பட்டியலையும் நீதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் சுவாராம் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் தெரிவித்தார்.
சாட்சிகள் பட்டியலில் இடம் பெற்றுவர்களில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஆகியோரும் அடங்குவர்.
சுவாராம் இயக்குநர் குவா கியா சூங், அதன் செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல், வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி ஆகியோர் பாரிஸில் நிகழ்ந்த அந்த விசாரணையில் கலந்து கொண்டிருந்தனர்.
நஜிப் தற்காப்பு அமைச்சராக இருந்த போது கையெழுத்தான 7.3 பில்லியன் ரிங்கிட் ஸ்கோர்ப்பியோன் விற்பனை ஒப்பந்தம் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுவாராம் கொடுத்துள்ள புகாரை மறு உறுதி செய்யவும் நேற்றைய விசாரணை நிகழ்ந்ததாக கேப்ரியல் சொன்னார்.
“அந்த நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டதின் தொடர்பில் நாங்கள் கோரிய பதில்களை மலேசிய நாடாளுமன்றம் தருவதற்குத் தவறி விட்டதால் நாங்கள் அந்த வழக்கைச் சமர்பித்துள்ளோம்,” என்றும் அவர் மலேசியாகினியிடம் சொன்னார்.
அந்த வழக்கு நீதிபதிகளான Roger Le Loire, Serge Tournaire ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்படும்.