இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்படதின் தொடர்பில் உயர் நிலை மலேசிய அதிகாரிகளுக்கு தரகுப் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது சம்பந்தமாக பிரான்ஸில் சுவாராம் சமர்பித்துள்ள வழக்கு மீதான கேள்விகளுக்குப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
அந்த விஷயம் மீது கருத்துரைக்குமாறும் அவர் பிரஞ்சு நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பாரா என்றும் நஜிப்-பிடம் வினவப்பட்டது.
அந்த நீர்மூழ்கிகள் வாங்கப்பட்டதில் சம்பந்தப்பட்ட தற்காப்பு அமைச்சராக நஜிப் இருந்ததால் அவரது பெயரையும் ஒரு சாட்சியாக சுவாராம் குறிப்பிட்டுள்ளது.
“நான் கருத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. நான் கருத்துக் கூற விரும்பவில்லை நன்றி,” என அவர் சொன்னார்.
அவர் பினாங்கில் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் இரண்டு அரசு சாரா அமைப்புக்களை- ஒன்று இந்திய அமைப்பு, இன்னொன்று சீன அமைப்பு- சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அந்த வழக்கு தொடர்பான கேள்விகளை தவிர்ப்பதற்கான காரணங்கள் கேட்கப்படவிருந்த வேளையில் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்த அந்த நிருபர்கள் சந்திப்பு முடித்துக் கொள்ளப்பட்டு பிரதமர் அங்கிருந்து புறப்பட்டார்.
கடந்த வாரம் பிரஞ்சு நீதிமன்றம் நீதிபதி Roger Le Loire முன்னிலையில் கூடிய போது மூவர் கொண்ட சுவாராம் குழு சமர்பித்த அறிக்கையும் சாட்சிகள் பட்டியலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.