பெர்சே மாற்று இடங்களைப் பற்றி யோசிக்க விருக்கிறது

எதிர் வரும் பெர்சே 3.0 பேரணிக்கு மாற்று இடத்தை உள்துறை அமைச்சர் வழங்க முன் வந்திருப்பது மீது விவாதிக்க நாளை இரவு பெர்சே கூட்டமைப்பு கூடுகிறது.

பெர்சே அமைப்பு தூய்மையான நேர்மையான தேர்தல்களுக்காக போராடுகிறது.

அந்தக்  கூட்டத்தின் முடிவு வரும் வரைக்கும் மெர்தேக்கா சதுக்கத்தில் பெர்சே 3.0 பேரணியை நடத்தும் தனது முடிவில் அந்த அமைப்பு உறுதியாக இருக்கிறது.

பெர்சே 3.0க்கு மாற்று இடத்தை வழங்கும் பொறுப்பை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திடம் (டிபிகேஎல்) ஒப்படைத்துள்ளார்.

பெர்சே தனது ஏப்ரல் 28 பேரணியை நடத்துவதற்கு மெர்தேக்கா அரங்கம் அல்லது புக்கிட் ஜலில் அரங்கத்தை அது பெறுவதற்கு ‘உதவி செய்ய’ ஹிஷாமுடின் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த விவகாரம் மீது கருத்துரைக்க பெர்சே நடவடிக்கை குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா மறுத்து விட்டார். நாளைய கூட்டத்தில் அது பற்றி பெர்சே அமைப்பில் உள்ள மற்ற அரசு சாரா அமைப்புக்களிடம் கருத்துக்கள் கோரப்படும் என்றார் அவர்.

“நாம் எப்படி பதில் அளிக்க வேண்டும் என்பது மீது அரசு சாரா அமைப்புக்களுடைய இணக்கத்தைப் பெற வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தூய்மையான நேர்மையான தேர்தல்கள் மீது பெர்சே அமைப்பு தெரிவித்த கோரிக்கைகளை-குறிப்பாக அஞ்சல் வாக்குகள், தேர்தல் குற்றங்கள், கறை படிந்த அரசியலுக்கு முடிவு கட்டுவது ஆகியவை-  பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து அது தனது மூன்றாவது சாலைப் பேரணியை நடத்துவதற்கு தயாராகி வருகிறது.

அந்தக் கூட்டமைப்பில்  மொத்தம் 62 அரசு சாரா அமைப்புக்கள் அங்கம் பெற்றுள்ளன.

பேரணியை நடத்தும் இடத்தை மாற்றுமாறு பல அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும் சுதந்திரமான, ஜனநாயக மலேசியாவுக்கான மக்கள் போராட்டத்துக்கு மெர்தேக்கா சதுக்கம் வரலாற்று முக்கியத்துவம் உடையது என்பதால் பெர்சே அந்த இடத்திலிருந்து பின் வாங்க பெர்சே மறுத்து வருகிறது.

“அரச மலேசிய போலீஸ் படையின் 205வது ஆண்டு நிறைவு உட்பட பல நிகழ்வுகள் அண்மைய காலத்தில் நடைபெற்றுள்ளதால் மெர்தேக்கா சதுக்கம் ஏன் பொருத்தமாக இல்லை  எனக் கூறுவதற்கு நாங்கள் எந்தக் காரணத்தையும் காணவில்லை,” என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

கோலாலம்பூர் மெர்தேக்கா சதுக்கத்தில் தனது குந்தியிருப்பு போராட்டத்தை நடத்துவதற்கு பெர்சே சமர்பித்த விண்ணப்பத்தை டிபிகேஎல் கடந்த வெள்ளிக் கிழமை நிராகரித்து விட்டது. “தேசிய நிலையிலான” கொண்டாட்டங்கள் மட்டுமே அங்கு நடைபெற முடியும் என டிபிகேஎல் கூறியது.