முடிவு உங்கள் கையில் என சிலாங்கூர் இசி-யிடம் சொல்கிறது

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை “தூய்மைப்படுத்தினால்” சிலாங்கூரில் தனியாக தேர்தல்களை நடத்துவதை அது தவிர்க்கலாம்.

இவ்வாறு சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு இசி முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தாமல் இருந்தால் வரிப்பணம் எவ்வளவு செலவு செய்யப்படும் என்பது பற்றி அது பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்றார் அவர்.

“வாக்காளர் பட்டியல் அதிகக் கறை படிந்ததாக மாறி வரும் வேளையில் அதனை சுத்தப்படுத்துவதில் இசி தீவிரமாக இறங்கினால் தேர்தல்களை தனித்தனியாக நடத்தும் பிரச்னையே எழாது,” என்றும் பாக்கே ஹுசின் குறிப்பிட்டார்.

“பல ஆதாரங்கள் காட்டப்பட்ட போதிலும் இசி சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன்  பொருத்தமே இல்லாத வினோதமான காரணங்களையும் அது கொடுத்து வருகிறது.”

சிலாங்கூரில் தனியாக தேர்தல்களை நடத்தினால் 30 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என்று இசி  துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறியதாக mStar இணையத் தளத்தில் வெளியான செய்தி பற்றி பாக்கே கருத்துரைத்தார்.

எப்போது தேர்தல்களை நடத்த வேண்டும் என முடிவு செய்வதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு உள்ள உரிமையைக் கட்டுப்படுத்துவதற்கு ‘விலைக் குறிப்புச் சிட்டையை’ காரணமாக பயன்படுத்தக் கூடாது என்றார் அவர்.

“பிஎன் பேச்சாளராக இருக்க வேண்டாம்”

தேர்தல்களை தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டதற்கு பெர்சே 2.0 தெரிவித்த தேர்தல் சீர்திருத்த கோரிக்கைகளை இசி அலட்சியம் செய்ததே முக்கியக் காரணம் என்பதை இசி உணர வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

“மக்கள் வரிப்பணம் பற்றி அது பேச விரும்பினால் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் தவறாகப் பயன்படுத்திய 250 மில்லியன் ரிங்கிட்டைப் பற்றியும் கூட்டரசு அரசாங்கம் வராத கடனாக எழுதியுள்ள  589 மில்லியன் ரிங்கிட் பெறும் தாஜுடின் ராம்லி கடன் பற்றியும் என்ன சொல்வது ?”

“MEX நெடுஞ்சாலை விற்பனை பற்றி என்ன சொல்வது ? மாஜு ஹோல்டிங்ஸுக்கு வழங்கப்பட்ட 900 மில்லியன் ரிங்கிட் மானியத்தை அரசாங்கம் மீட்க முடியுமா ? அவை மக்கள் வரிப் பணம் விரயமாக்கப்பட்ட விஷயம் இல்லையா ?”

வான் அகமட் கருத்துக்கள் அரசியல் தன்மை கொண்டவை. தாம் தொடர்ந்து அவ்வாறு செய்ய அவர் எண்ணியிருந்தால் தமது பதவியை அவர் துறப்பது நல்லது என்றும் பாக்கே சொன்னார்.

“பிஎன் பேச்சாளராக நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இசி மதிக்கப்பட வேண்டுமானால் அது தனது வேலையை கௌரவமாகவும் பொறுப்பாகவும் செய்ய வேண்டும். அப்படி அது செய்தால் அது போற்றப்படும்,” என்றார் அவர்.