எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும் புதிய சித்தாந்தத்தை குறிப்பாக கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகள் குறித்து பிரச்னைகளை உருவாக்குவதை நிராகரிக்குமாறு இளைய தலைமுறையினரை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்தகைய நடவடிக்கைகள் “நாட்டை நாசப்படுத்தும்” முயற்சிகள் என வருணித்த அவர், அரசாங்கம் செய்கின்ற அரசமைப்பு விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நேர்மையற்றவை என எதிர்க்கட்சிகள் சொல்வது மக்களைக் குழப்புவதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் அவதூறுகள் என்றார் அவர்.
“நாம் இதுகாறும் ஏற்றுக் கொண்டுள்ள பல விஷயங்கள் மீது கேள்வி எழுப்புவதின் வழியும் பிஎன் இந்த நாட்டில் உள்ள எல்லா இனங்களுக்கும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி கூட்டரசு அரசமைப்பில் உள்ள விதிகளில் பெரும்பகுதி மீது கேள்வி எழுப்புவதின் மூலமும் அவை புதிய சித்தாந்தத்தை கொண்டு வந்துள்ளன.”
“அவை அனைத்தும் அவதூறுகள். அவை இந்த நாட்டை நாசப்படுத்த விரும்புவதால் அவற்றை எதிர்க்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்,” என முஹைடின் இன்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற பயிற்சி மய்யத்தில் கூட்டரசுப் பிரதேச நிலையிலான “பிஎன் இளம் மக்கள் தேர்வு” என்னும் இயக்கத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய போது கூறினார்.
PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதி போன்ற விஷயங்களில் எதிர்க்கட்சிகள் தில்லுமுல்லு செய்யும் போக்கையும் திருநங்கை குழுக்களுக்கு சுதந்திரம் கொடுக்குமாறும் விடுக்கப்படும் கோரிக்கைகளையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அத்தகைய கோரிக்கைகள் மக்களுக்கும் நாட்டுக்கும் பிரச்னைகளை கொண்டு வரும் என்றும் முஹைடின் சொன்னார்.
PTPTN பிரச்னையில் தில்லுமுல்லு செய்யப்பட்டதால் மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைக்கவும் ஒன்று கூடவும் இளைய தலைமுறையினரையும் பல்கலைக்கழக மாணவர்களையும் வலியுறுத்துவதில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், உண்மையில் அந்த மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.