உள்துறை அமைச்சு அடுத்த வாரம் பெர்சே பேரணியையும் அது போன்ற அமைதியாக கூட்டங்களையும் அனுமதிக்கும். ஏனெனில் அவை பாதுகப்புக்கு மருட்டலை ஏற்படுத்தவில்லை.
இவ்வாறு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.
பெர்சே ஒன்று கூடும் போது அது பாதுகாப்புக்கு குந்தகமாக இருக்காது என்பதால் மிக அதிகமான அளவுக்கு போலீஸ்- எப்ஆர்யூ என்ற கலகத் தடுப்புப் போலீஸ் போன்றவை- தேவையில்லை என்பதை அமைச்சு மேற்கொண்ட தொடக்க ஆய்வுகள் காட்டியுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இருந்தாலும் கலகத் தடுப்புப் போலீஸ் மற்றும் இதர போலீஸ் பிரிவுகள் எப்போதும் ஆயத்தமாக இருக்கும்,” என அவர் நேற்று புக்கிட் கியாராவில் செம்ரோங்கில் பிறந்த மக்களுடன் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் கூறினார்.
மெர்தேக்கா சதுக்கத்தில் அந்த பேரணி நிகழ டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அனுமதிக்காதது பற்றி கருத்துரைத்த ஹிஷாமுடின், அதற்கு டிபிகேஎல் சொந்தக் காரணங்களை வைத்திருக்க வேண்டும் என்றார். மக்கள் அந்த முடிவுக்கான காரணங்களை பார்க்க வேண்டும் என்றார் அவர்.
“மெர்தேக்கா சதுக்கத்தில் எந்தப் பேரணியையும் அனுமதிப்பது இல்லை என்னும் முடிவுக்கு டிபிகேஎல் சொந்தக் காரணங்களை வைத்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக அது மற்ற இடங்களை வழங்கக் கூடாது என அர்த்தமில்லை,” என்றும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
பெர்சே ஒன்று கூடுவதற்கு மெர்தேக்கா அரங்கம் அல்லது புக்கிட் ஜலில் அரங்கத்தை அதன் ஏற்பாட்டாளர்கள் மாற்று இடங்களாக பயன்படுத்துவதை அமைச்சு தடுக்காது என்றும் அவர் சொன்னார்.
என்றாலும் அந்த இரண்டு அரங்குகளின் நிர்வாகங்களுக்கு ஏற்பாட்டாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.