அடுத்த பொதுத் தேர்தலில் அடையாள மையைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சீனமொழி நாளேடு ஒன்று கூறியுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அம்முடிவு காணப்பட்டதாக சின் சியு டெய்லி பல வட்டாரங்களை மேற்கோள்காட்டித் தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த கைரேகைப் பதிவுமுறையுடன் ஒப்பிடும்போது அடையாள மையே பொருத்தமானது என்று அமைச்சரவை கருதுவதாக அந்தச் செய்தியறிக்கை குறிப்பிட்டது. பல நாடுகளில் பன்முறை வாக்களிப்பதைத் தடுக்க அது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அது பற்றி பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசைத் தொடர்புகொண்டபோது அது பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார்.
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான எல்லா விவகாரங்களையும் உத்தேச நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி)விடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் அமைச்சரவை முடிவு என்றாரவர்.
தேர்தல் சீரமைப்புக்காக மாற்றரசுக் கட்சியினரும் சமூக அமைப்புகளும் தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிஎஸ்சி-யைப் பரிந்துரைத்தார். அக்குழு, அக்டோபர் மூன்றில் தொடங்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அமைக்கப்படும்.
ஆனால் மாற்றரசுக்கட்சி, தேர்தல் சீரமைப்பில் நஜிப் உண்மையில் அக்கறை காட்டவில்லை என்பதால் பிஎஸ்சி-இல் இடம்பெறுவது பற்றி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறியுள்ளது.
அத்துடன் பிஎஸ்சி முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்து அதன்பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்று நஜிப் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.
அடையாள மையைப் பொறுத்தவரை அரசமைப்பில் திருத்தம் தேவையில்லை என்று நஸ்ரி ஏற்கனவே கூறியுள்ளார்..
“சட்டத்துறைத் தலைவரிடம்(ஏஜி) பேசி விட்டேன். அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், பிஎஸ்சி அதை முதலில் விவாதிக்க வேண்டும்”, என்று கடந்த திங்கள்கிழமை அவர் கூறினார்.
கடந்த மாதம் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் பேசும்போது அடையாள மையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அரசமைப்புத் திருத்தம் அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே காரணத்தைச் சொல்லித்தான், அவருக்குமுன் தேர்தல் ஆணையத் தலைவராக இருந்த அப்துல் ரஷிட், 2008-இல் வாக்களிப்புக்கு நான்கே நாள்கள் இருந்தபோது அடையாள மையைப் பயன்படுத்தும் நடைகுறையை ரத்துச் செய்தார்.
அடையாள மை பயன்படுத்துவது அரசமைப்புப்படி வாக்காளருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை மீறுவதாக இருக்கலாம் ஏனென்றால் அரசமைப்பு, விரல் நகத்தில் அடையாள மையை இட்டுக்கொள்ள மறுக்கும் வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதிக்கிறது என்று ரஷிட் கூறினார்.
அரசமைப்பில் திருத்தம் செய்வதுதான் இதற்குத் தீர்வு என்றாரவர். அப்போது அவர் சொன்னதை ஏஜி அப்துல் கனி பட்டேய்லும் ஆமோதித்தார். ஆனால், இப்போது அவர் மனம் மாறிவிட்டதாகத் தெரிகிறது என்றார் நஸ்ரி.