டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரி ஒருவர் “டத்தாரானை ஆக்கிரமிக்கும்” ( ‘Occupy Dataran’) போராளி ஒருவரைப் பிடிப்பதற்கு முயற்சி செய்த போது அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக கல்லூரி மாணவர் ஒருவர் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.
உமார் முகமட் அஸ்மி என்ற அந்த மாணவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். ஒரு போராளியான முகமட் பாஹ்மி ரெஸா முகமட் ஸாஹிரினை “பிடித்து கொண்டு செல்வதற்கு” உமார் தடையாக இருந்ததாக குற்றவியல் சட்டத்தின் 186வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நேற்று காலை எட்டு மணி அளவில் மெர்தேக்கா சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த எதிர்ப்பு முகாம்கள் மீது டிபிகேஎல் திடீரென சோதனை நடத்திய போது அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்டது.
“டத்தாரானை ஆக்கிரமிக்கும்”(Occupy Dataran ) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் முதலாவது நபர் உமார் ஆவார்.
உமார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது கூடின பட்சம் 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மாஜிஸ்திரேட் ஸாக்கி அஸ்ராப் ஜுபிர் ஜாமீன் தொகையாக 1,000 ரிங்கிட் நிர்ணயம் செய்தார்.
அந்த வழக்கு மீண்டும் மே 8ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
பின்னர் நிருபர்களைச் சந்தித்த பிரதிவாதித் தரப்பு வழக்குரைஞர் ஷாரெட்ஸான் ஜோஹான், முகமட் பாஹ்மி ரெஸா மீது குற்றம் சாட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.
“அவர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதத்தில் அவர் போலீஸில் ஆஜராக வேண்டும்,” என்றார் அவர்.
மாணவர்கள் மெர்தேக்கா சதுக்கத்தில் நடத்தும் எதிர்ப்புப் போராட்டத்தின் 9வது நாள் இன்றைய தினமாகும்.
நேற்று டிப்கேஎல் அந்த முகாம் வைக்கப்பட்டிருந்த கூடாரங்களையும் சாதனங்களையும் பறிமுதல் செய்தார்கள்.
பொது இடங்களை மீட்கும் நோக்கம் கொண்ட- “டத்தாரானை ஆக்கிரமிக்கும்”(Occupy Dataran ) அமைப்பு, தேசிய உயர் கல்வி நிதி எதிர்ப்பு அமைப்பு ஆகிய இரண்டும் அந்த இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. அந்த இரண்டு அமைப்புக்களிலும் மாணவர்கள் அங்கம் பெற்றுள்ளனர்.