தேர்தல் சட்ட மாற்றங்கள் மூலம் பிஎன் 13வது பொதுத் தேர்தலை திருட முயலுகிறது

தேர்தல் சட்டங்களுக்கு பிஎன் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், அது “13வது பொதுத் தேர்தலைத் திருடுவதற்கு” கொண்டுள்ள நோக்கத்தைத் ‘தெளிவாக’ காட்டுகிறது என பிகேஆர் கூறியுள்ளது.

“கடந்த வியாழக் கிழமை பிஎன் அரசாங்கமும் அதன் கூட்டாளியான இசி என்ற தேர்தல் ஆணையமும் 13வது பொதுத் தேர்தலைக் களவாடுவதற்குத் தாங்கள் கொண்டுள்ள நோக்கத்தை ஐயத்துக்கு இடமின்றித் தெளிவாகக் காட்டி விட்டன.”

வாக்களிப்பு நடைமுறையை அரசியல் கட்சிகளின் பேராளர்கள் கண்காணிப்பதற்கான அதிகாரத்தை மேலும் கட்டுப்படுத்தவும் அந்த முறையில் தில்லுமுல்லு செய்வதற்கும் உதவியாகவும் 1954ம் ஆண்டுக்கான தேர்தல் குற்றங்கள் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அவை சமர்பித்துள்ளன,” என பிகேஆர் உச்ச மன்ற உறுப்பினரான சிவராசா ராசையா ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அந்த மாற்றங்கள் வாக்களிப்பு நடைமுறையைக் கண்காணிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பெரிதும் குறைத்து விடும்,” என்றார் அவர்.

பக்காத்தான் எம்பி-க்கள் கடுமையாக ஆட்சேபித்த பின்னர் அந்தத் திருத்தங்களில் சில மீட்டுக் கொள்ளப்பட்டன என்றும் சிவராசா தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு உதவி செய்ய அரசியல் கட்சிகள் pondok panas சாவடியை அமைத்துக் கொள்வதற்கான உரிமை அகற்றப்படுவதும் தேர்தல் முகவர்கள், வாக்குகள் எண்ணப்படும் இடத்துக்கு நியமிக்கப்படும் முகவர்கள் ஆகியோர் வரும் நேரத்தையும் புறப்படும் நேரத்தையும் இசி நிர்ணயம் செய்யும் வகையில்  14(1A) பிரிவைத் திருத்தம் செய்வதும் அந்தத் திருத்தங்களில் அடங்கும்.

என்றாலும் வாக்குச் சாவடிகளில் உள்ள தேர்தல் ஆணைய மய்யங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகளின் பேராளர்கள் கண்காணிப்பதற்கு உள்ள உரிமையை அகற்றும் அந்தத் திருத்தத்தை பிஎன், நாடாளுமன்றத்தில் தனக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்டது எனவும் சிவராசா சொன்னார்.

பக்காத்தான் அந்தத் திருத்தங்களை மீறும்

‘தேர்தல் ஊழியர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது என’ ‘பிஎன் அந்தத் திருத்தத்துக்கு ‘கவைக்கு உதவாத காரணத்தை’ கூறியுள்ளதாகவும் சுபாங் எம்பி-யுமான சிவராசா சொன்னார்.

“அந்தச் சிரமங்கள் என்ன என்று வினவப்பட்ட போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை,” என்றார் அவர்.

“தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு சமர்பித்த முக்கிய நிபந்தனைகளை அமலாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதில் பிஎன்-னும் இசி-யும் ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகியுள்ளது” என்றும் சிவராசா தெரிவித்தார்.

“தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படையான நிலையை மேலும் குறைப்பதும் தில்லுமுல்லு செய்வதை  எளிதாக்குவதும்” ஆளும் அரசாங்கத்தின் நோக்கம் என்பதையும் அந்தத் திருத்தங்கள் காட்டியுள்ளன என்றும் அவர் சொன்னார்.

“ஆகவே பெர்சே 3.0 முன்னைக் காட்டிலும் இப்போது மென்மேலும் அவசியமாகியுள்ளது,” என்றார் அந்த சுபாங் எம்பி.

அந்தப் புதிய விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டாலும் பக்காத்தான் அவற்றை மீறும் என கடந்த வியாழக் கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளதை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

“தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படையான தன்மைக்கு உதவி செய்யும் பொருட்டு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பக்காத்தான் ராக்யாட் விட்டுக் கொடுக்காது,” என்றும் சிவாராசா உறுதியாகக் கூறினார்.