பினாங்கு கொடி மலை அடிவாரத்தில் உள்ள “சட்ட விரோத” கார் நிறுத்துமிடக் கட்டிடத்திலிருந்து மாநில அரசாங்கம் 50 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்துள்ளதாக கூறும் பொய்ச் செய்தியை வெளியிட்டதற்காக மாநில அரசாங்கம் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு மீது வழக்குத் தொடருகிறது.
உண்மையில் அந்தத் திட்டத்துக்கான செலவு 5 மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் வேளையில் அந்த ஏடு செப்டம்பர் 6ம் தேதி வெளியிட்ட செய்தியில் கெட்ட நோக்கத்துடன் 50 மில்லியன் ரிங்கிட் என்பதை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“குவான் எங்கை விசாரிக்குமாறு எம்எசிசி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ ( SPRM diminta siasat Guan Eng ) என்னும் தலைப்பிலான அந்தச் செய்தி அந்த நாளேட்டின் செப்டம்பர் 5ம் தேதி இணையப் பதிப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு பிஎன் தலைமையிலான முந்திய அரசாங்த்தினாலும் சுற்றுலா அமைச்சினாலும் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள வேளையில் நிதி மோசடிகள் தொடர்பில் தம்மை குற்றம் சாட்டியுள்ளது தமக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் லிம் சொன்னார்.
“மோசமாக வடிவமைக்கப்பட்ட’ அந்தத் திட்டத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார். தாம் முந்திய அரசாங்கம் அதனை அங்கீகரித்தது என தாம் பழி சுமத்தவில்லை என்றும் மாறாக ‘உண்மைகளை எடுத்துரைப்பதாக’ அவர் சொன்னார்.
2007ம் ஆண்டு அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட போது தாம் முதலமைச்சராகவும் இல்லை. எம்பி-யாகவும் அல்லது சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லை என லிம் மேலும் கூறினார்.
“உத்துசான் கட்டுரை பொய்த் தகவல் என்பது தெளிவாகும். மாநில அரசாங்கத்தின் நேர்மையை தற்காக்கவும் அந்த தீய சக்திகளிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொள்ளவும் நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம்,” என்றார் அவர்.
“அதிகார அத்துமீறல்” குற்றச்சாட்டு
“அவர்கள் ஊழல் மலிந்தவர்களப் பற்றி தகவல் வெளியிடுவதில்லை. ஊழல் இல்லாதவர்கள் பற்றி செய்திகளைப் போடுகின்றார்கள். அவர்களுக்கு கறுப்பு என்றால் வெள்ளை, வெள்ளை என்றால் கறுப்பு. இனிமேலும் நாங்கள் கறுப்புச் சாயம் பூசப்படுவதற்கோ, அவதூறு கூறப்படுவதற்கோ ஒடுக்கப்படுவதற்கோ தயாராக இல்லை.”
செப்டம்பர் 6ம் தேதி உத்துசான் மலேசியாவின் 24வது பக்கத்தில் வெளியான அந்தச் செய்தி, லிம்-முக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் நிபோங் திபால் எம்பி தான் தீ பெங் புகார் செய்துள்ளதாக குறிப்பிட்டது.
அந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் நிதியை லிம் தலைமையிலான மாநில அரசாங்கம், பினாங்கு மேம்பாட்டுக் கழகம், பினாங்கு நகராட்சி மன்றம் ஆகியவை “தவறாகப் பயன்படுத்தி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்கலாம்” என தாம் சந்தேகம் கொள்வதாக தான் கூறியிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த லிம், 2008ம் ஆண்டு தாம் பதவி ஏற்றுக் கொண்ட பின்னர் அந்தத் திட்டத்தை அங்கீகரிக்கும்படி தாம் கேட்டுக் கொள்ளப்படவில்லை என்றும் அந்தத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி தமக்கு ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
அந்தத் திட்டத்துக்கான ‘வாடிக்கையாளர்’ சுற்றுப்பயண அமைச்சு என்பதால் அதன் முன்னேற்றம் பற்றி பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்துக்கோ லிம்-முக்கோ தெரிவிக்கப்படவில்லை என பினாங்கு மேம்பாட்டுக் கழக தலைமை நிர்வாகி ரோஸ்லி ஜாபார் தெளிவுபடுத்தியுள்ளார்.