கடந்த ஆண்டு பெர்சே சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவித்தது குறித்து மேலும் விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேனுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்புக்கு மிரட்டலாக இல்லை என்று பெர்சே 3.0 பேரணியை அனுமதித்த ஹிசாமுடினின் நிலைப்பாட்டில் காணும் மாற்றத்தின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 9 பெர்சே 2.0 பேரணிக்கு முன்னதாக ஹிசாமுடின் அந்த கூட்டமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பு செய்திருந்தார்.
அரசு தரப்பு மூத்த வழக்குரைஞர் அஸிசான் முகமட் அர்ஷாட்டிடம் நீதிபதி ரொஹானா யுசூப் இந்த விளக்கத்தைக் கோரினார். மே மாதம் 10 ஆம் தேதிக்குள் அமைச்சர் அது குறித்த ஒரு சத்தியப் பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஹிசாமுடினையும் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரையும் குறுக்கு விசாரணை செய்வதற்கும் கடந்த ஆண்டு நடந்த பேரணிக்கு முன்னதாக பெர்சேவுக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள 1,706 புகார்களைப் பெறுவதற்காகவும் பெர்சே தாக்கல் செய்திருக்கும் மனு மீதான தீர்ப்பை நீதிபதி மே 15 இல் வழங்குவார்.
நீதிபதியை அவரது அறையில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்சேயின் வழக்குரைஞர்களான எஸ்டன் பைவா மற்றும் டோமி தோமஸ் இதனைத் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நடைபெற விருப்பதாக கூறப்படும் பெர்சே 3.0 பேரணி குறித்த சமீப சம்பவங்கள் பற்றிய தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் அமைச்சரை மேற்கோள் காட்டி கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையில் நீதிபதி இந்த விளக்கத்தைக் கோரியுள்ளதாக எஸ்டன் கூறினார்.
“அமைச்சரின் உத்தரவில் பெர்சே அமைப்பு தடை செய்யப்படுகிறது. அமைச்சரின் அந்த உத்தரவில் பெர்சே 2.0 என்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை”, என்றாரவர்.
“ஜூலை 1 ஆம் தேதியிடப்பட்ட அமைச்சரின் உத்தரவுக்கு எதிராக பெர்சே தொடுத்துள்ள முதன்மை மனு குறித்தும் நீதிபதி அக்கறை கொண்டுள்ளார்.”