சாலைக்கட்டணம்: இதுவரை ஆதாயம் ரிம13பில்லியன்

முக்கிய நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்கள் கட்டுமானச் செலவுகளையெல்லாம் சரிக்கட்டி “கொள்ளை” ஆதாயத்தை வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும்கூட சாலைக்கட்டணங்களைத் தொடர்ந்து கூட்டிவருவது ஏன் என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

டிஏபி தலைமைச் செயலாளருமான லிம்முக்கு பொதுப்பணி துணை அமைச்சர் யோங் கூன் செங் அனுப்பிவைத்த எழுத்துப்பூர்வமான பதிலில், 27 நெடுஞ்சாலைகளை நிர்வகித்து வரும் குத்தகையாளர்கள் இதுவரை ரிம37.7பில்லியனைச் சாலைக்கட்டணமாக வசூலித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோக, அரசாங்கமும் அவர்களுக்கு ரிம2.1பில்லியனை இழப்பீடாக வழங்கியுள்ளது. 

நெடுஞ்சாலைகளின் கட்டுமானச் செலவே ரிம26.4பில்லியன்தான். அந்த வகையில் சாலைக்கட்டணத்தின்வழி கிடைத்துள்ள ஆதாயம் ரிம13பில்லியனுக்கும் கூடுதலாகும் என்று லிம் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் தெரிவித்தார்.

“ஆக,நாம் பணம் கறக்கும் காமதேனுவாக விளங்குகிறோம். சாலைக்கட்டணம் தொடர்ந்து உயர்வது ஏன் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்கள் ஏற்கனவே நல்ல ஆதாயம் பெற்று வருகிறார்கள். வடக்கு-தெற்கு நெடுஞ்சாலைத் திட்டம் (பிளஸ்) ஒரு நல்ல எடுக்காட்டு. 2039-வரை அது சாலைக்கட்டணம் வசூல் செய்யும் சலுகையைப் பெற்றுள்ளது”, என்றாரவர்.

லிம் கொடுத்த புள்ளிவிவரப்படி பிளஸ் கட்டுவதற்கு ஆன செலவு ரிம5.9பில்லியன். ஆனால், அதில் இதுவரை 23.5பில்லியன் சாலைக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கும் மேலே, அரசாங்கம் ரிம735.2மில்லியனை இழப்பீட்டுத் தொகையாகவும் கொடுத்துள்ளது.