மலேசியாவின் தேர்தல் முறையில் காணப்படும் மூன்று விஷயங்கள் குறித்து எழுவர் கொண்ட உண்மை நிலை அறியும் குழு ஒன்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் கவலை தெரிவித்துள்ளது.
அந்த மூன்றில் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய 10 நாள் காலமாகும் என்று ஆஸ்திரேலிய செனட்டரான நிக்கோலஸ் செனோபோன் கூறினார்.
“ஆஸ்திரேலியாவில் குறைந்த பட்சம் 33 நாட்களும் இந்தியா, பாகிஸ்தானில் 90 நாட்களும் வழங்கப்படுகின்றன. அவை உண்மையில் மிக அதிகமான காலம் எனக் கருதப்படுகிறது,” என அவர் நஸ்ரியைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அலுவலக அழைப்பை ஏற்று மற்ற பேராளர்களுடன் செனோபோன் இங்கு வந்துள்ளார்.
தொகுதிகளில் காணப்படும் வாக்காளர் விகிதாச்சார வேறுபாடுகள் கவலையைத் தருகின்ற இன்னொரு விஷயம் என அவர் சொன்னார்.
“ஒரு வாக்குக்கு உள்ள மதிப்பு குறித்தும் நாங்கள் எங்கள் கவலையைத் தெரிவித்தோம். சில இடங்களில் வாக்காளர்கள் 7,000 முதல் 8,000 பேர் மட்டுமே இருக்கின்றனர். அதே வேளையில் சில தொகுதிகளில் 100,000 வாக்காளர்கள் உள்ளனர். அந்த வேறுபாடு ஒரு நாட்டின் ஜனநாயக சூழ்நிலையை பிரதிபலிக்கவில்லை,” என்றார் செனோபோன்.
ஊடகங்களில் எதிர்க்கட்சிகளுக்கும் அரசாங்கக் கட்சிகளுக்கும் இடையில் வழங்கப்படும் வாய்ப்புக்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு அந்த அனைத்துலகக் குழுவின் கவனத்தைப் பெற்றுள்ள இன்னொரு விஷயமாகும்.
ஆனால் அவர் அந்த மூன்று விஷயங்களுக்கும் நஸ்ரி வழங்கிய பதில் என்ன என்பதை செனோபோன் தெரிவிக்கவில்லை. “தூய்மையாக நியாயமாக” தேர்தல் நடத்தப்படும் என அவர் அந்தக் குழுவுக்கு உறுதி கூறியதாக மட்டும் அவர் சொன்னார்.
நஸ்ரிக்கு ‘உண்மை’ தெரிவிக்கப்பட்டது
எதிர்க்கட்சிகள் தெரிவித்த புகார்கள் அடிப்படையில் அந்தக் குழு இயங்குகிறதா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு , தகவல்கள் அனைத்தும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன என்றும் எல்லாத் தரப்புக்களின் எண்ணங்களையும் செவிமடுக்கும் நல்லெண்ணத்துடன் குழு இங்கு வந்துள்ளது என செனோபோன் பதில் அளித்தார்.
“நாங்கள் மலேசியாவின் நண்பர்களாக வந்துள்ளோம். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மைகளை சொல்லிக் கொள்வர்,” என்றார் அவர்.
பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோரை குழு இன்று சந்திக்கிறது. அது தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 2.0, தேர்தல் ஆணையம் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு நாட்களில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அந்தக் குழு தனது பணிகளை நிறைவு செய்து தனது இடைக்கால அறிக்கையை வழங்கும். அடுத்த இரண்டு வாரங்களில் அதன் இறுதி அறிக்கை பொது மக்களுக்கு வெளியிடப்படும்.
பாகிஸ்தானிய செனட்டர் Hasil Khan Bizenjo, பிலிப்பீன்ஸைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் Amado Valdez, ஜெர்மனியின் Freidrich Naumann அற நிறுவனத்தைச் சேர்ந்த Juliane Schmucker, நியூ சவுத் வேல்ஸ் அரசியல் இணைப் பேராசிரியர் Clinton Fernandes, இந்தியப் பத்திரிக்கையாளர் Mobashar Jawed Akhbar, இந்தோனிசிய அனைத்துலக அறிஞர்கள் சங்கத் தலைவர் Mohamad Nasir Tamara Tamimi ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றவர்கள்.