PTPTN தலைவர்: நாங்கள் கடன் முதலைகள் அல்ல

“PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதி சமூகப் பொறுப்புடன் இயங்குகிறது. அது வர்த்தக அமைப்பு அல்ல. அது கடன்களைத் திருப்பிச் செலுத்துமாறு பட்டதாரிகளை வேட்டையாடுவது இல்லை.” இவ்வாறு அதன் தலைமை நிர்வாகி அகோஸ் சோலான் கூறுகிறார்.

கடன்களைத் திரும்பப் பெறுவதில் பல பிரச்னைகள் உள்ளன. அந்தக் கடன்கள் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்ய PTPTN மற்ற வழிமுறைகளையும் வைத்திருக்கிறது என அவர் நேற்றிரவு PTPTN மீதான விவாத அரங்கில் கூறினார்.

என்றாலும் மாணவர்கள் தங்கள் கடன்களை திருப்பிச் செலுத்துமாறு செய்வதற்கு ‘நட்புறவான அணுகுமுறையையே அது பின்பற்ற விரும்புகிறது. “மற்ற வழிகளை” அது பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் அது PTPTN-ன் சமூகப் பொறுப்பாகும். ஆதாயம் தேடுவது அதன் நோக்கமல்ல என்றும் அகோஸ் தெரிவித்தார்.

“Kita bukan ah long. Kita professional (நாங்கள் கடன் முதலைகள் அல்ல. நாங்கள் தொழில் நிபுணர்கள்)” என அவர் சொன்ன போது அங்கிருந்த அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

கோலாலம்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் அந்த விவாதம் நடைபெற்றது.

அந்த மண்டப அமைப்பைச் சேர்ந்த இளைஞர் குழு PTPTN கடன் திட்டம் மாணவர்களை அடிமைப்படுத்தும் கடன் முதலையைப் போன்றது என கூறியிருந்ததற்கு அகோஸ் பதில் அளித்தார்.

நிதி அடிப்படையில் கரும்புள்ளி

‘உயர் கல்விச் சீர்திருத்தம்’-PTPTNனை ரத்துச் செய்வது என்னும் தலைப்பில் அங்கு விவாதம் நடத்தப்பட்டது.

அதில் மலேசியாகினியின் யோங் காய் பிங், சுயேச்சையான கட்டுரையாளர் பூ சியாங் கோங், மலேசிய அனைத்துலக இளைஞர், மாணவர் ஜனநாயக அமைப்பின் அனைத்துலகச் செயலாளர் ஹெங் கியா சுன் ஆகியோரும் பேசினார்கள்.

PTPTN, இபிஎப் என்ற ஊழியர் சேம நிதியிலிருந்து பெரிய அளவில் கடன்களை பெற்று வருவதாக யோங் சொன்னார். ஆனால் அந்த கடன் இன்னும் முழுமையாக திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றார் அவர்.

“2003க்கும் 2006க்கும் இடையில் இபிஎப்-பிடமிருந்து 12.5 பில்லியன் ரிங்கிட்டை PTPTN பெற்றது. அந்தத் தொகை வழங்கப்பட்ட மொத்தக் கடனில் 78 விழுக்காடு ஆகும். ஆனால் 2006ம் ஆண்டு வரையில் அதில் 1.8 பில்லியன் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது.”

அதற்குப் பதில் அளித்த அகோஸ், இபிஎப்-புக்கும் PTPTN கொடுக்க வேண்டிய கடனைக் காட்டிலும் மாணவர்கள் PTPTNக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் அதிகமாக இருப்பதாக விளக்கினார்.

“PTPTN இபிஎப்-புக்கு 25 பில்லியன் ரிங்கிட் கடன்பட்டுள்ளது. அதே வேளையில் மாணவர்கள் PTPTNக்கு 30 பில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும். ஆகவே நாங்கள் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் சுமை அல்ல,” என்றார் அவர்.