பெர்சே 3.0 மீது அடக்குமுறை கட்டவிழ்த்துப்படப்படுவது திண்ணம் என்பதற்கான தெளிவான அறிகுறிகளை புத்ராஜெயா இன்று காட்டியுள்ளது.
டத்தாரான் மெர்தேக்காவில் அந்தப் பேரணியை நடத்துவது என அதன் ஏற்பாட்டாளர்கள் ‘பிடிவாதமாக இருந்தால்’ அதனை தடுப்பதற்கு போலீஸ் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
“நாங்கள் ஏற்கனவே விட்டுக் கொடுத்துள்ளோம். மாற்று இடங்களையும் வழங்க முன் வந்துள்ளோம். ஆனால் அவர்கள் பிடிவாதமாக இருந்தால் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது போலீசைப் பொறுத்தது,” என அவர் சொன்னதாக பெர்னாமா குறிப்பிட்டது.
பொது ஒழுங்கிற்கு யாரும் மிரட்டலை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது போலீசாரின் பொறுப்பு என்றார் ஹிஷாமுடின்.
“அரசியல் உருமாற்ற உணர்வுக்கு ஏற்பவும் அரசாங்கம் கொண்டு வந்துள்ள மாற்றங்களுக்கு ஏற்பவும் ஏற்பாட்டாளர்கள் மாற்று இடங்களில் ஒன்று கூடலாம்.”
“ஆகவே இந்த நாட்டில் ஆரோக்கியமான முதிர்ச்சி அடைந்த ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு எல்லாத் தரப்புக்களும் பங்காற்ற வேண்டும்,” என்றார் உள்துறை அமைச்சர்.
வரும் சனிக்கிழமை பேரணியை நடத்தப் போவதாக ஏப்ரல் 4ம் தேதி தேர்தல் சீர்திருத்த நெருக்குதல் அமைப்பான பெர்சே 2.0 அறிவித்தது.
தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு தேர்தல் முறையில் முழுமையான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கத் தவறி விட்டது எனக் கூறி பெர்சே 2.0 அமைப்பு அந்த 3.0 பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஹிஷாம்: வேறு இடங்களுக்குச் செல்ல இன்னும் கால அவகாசம் உள்ளது
புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை மேற்கோள் காட்டிய பெர்சே 2.0, டத்தாரான் மெர்தேக்காவில் பேரணியை நடத்த விரும்புவதாகவும் அந்தத் தகவலை போலீசுக்கும் டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்துக்கும் தெரிவிப்பது வெறும் நடைமுறையே என்றும் கூறியது.
டத்தாரானைப் பயன்படுத்துவதற்கு பெர்சே-க்கு அனுமதி வழங்க டிபிகேஎல் மறுத்து விட்டது. அதற்குப் பதில் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெர்தேக்கா அரங்கத்தை வழங்க முன் வந்தது.
என்றாலும் அவ்வாறு அது முன் வந்திருப்பது மிகவும் தாமதமாகும் என்றும் நேற்றுதான் அது தனக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் பெர்சே கூறியது.
வெகு காலத்துக்கு முன்பு தனக்கு அது தெரிவிக்கப்பட்டிருந்தால் அதனை பரிசீலித்திருக்கக் கூடும் என்றும் அது தெரிவித்தது.
டத்தாரான் மெர்தேக்காவில் பேரணி நிகழ்ந்தால் போலீஸ் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஹிஷாமுடின்,” ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கைகளை அது பொறுத்துள்ளது,” என்றார்.
தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமாறும் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு செயல்படுமாறும் போலீசுக்கு ஆணையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“முன்மொழியப்பட்டுள்ள மாற்று இடங்களை ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக் கொள்வர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏற்பாட்டாளர்கள் அதனைச் செய்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளது.”
மெர்தேக்கா அரங்கத்துடன், கோலாலம்பூர் காற்பந்து அரங்கம், கோலாலம்பூர் பாட்மிண்டன் அரங்கம், தித்திவாங்சா அரங்கம் ஆகியவையும் மாற்று இடங்களாக யோசனை கூறப்பட்டுள்ளன.