அம்னோ உறுப்பினராக தாம் இருந்திருக்கலாம் என்பதை இசி தலைவர் ஒப்புக் கொள்கிறார்

அம்னோ உறுப்பினராவதற்கோ அல்லது பதிவு செய்வதற்கோ தாம் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை எனக் கூறும் இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப், தமது பெயர் அம்னோ உறுப்பினர் பட்டியலில் இருக்கும் சாத்தியத்தை நிராகரிக்கவில்லை.

“நான் எப்போது எங்கு அம்னோ உறுப்பினராக இணைந்தேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. 1970ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நான் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றதும் எந்த ஒரு கட்சியாவது என் பெயரை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடும்,” என அவர் சினார் ஹரியானிடம் கூறினார்.

ஆளும் கூட்டணியில் அப்துல் அஜிஸும் அவரது துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரும் உறுப்பினர்களாக இருப்பதாக நேற்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் குற்றம் சாட்டினார். அதனால் தேர்தல்களை பாகுபாடு காட்டாமல் அவர்கள் நடத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் சைபுதின் எழுப்பினார்.

“அப்போது கூட நான் எந்தத் தொகுதி என்று கூட கூற முடியாது. ஏனெனில் என் படிப்பை முடித்ததும் நான் சிகாம்புட், செலாயாங், அம்பாங் என பல இடங்களுக்கு மாறியுள்ளேன். ஆகவே என் பெயர் முன்மொழியப்பட்டிருந்தால் அது எங்கு என்பது கூட எனக்குத் தெரியாது.,” என்றார் அப்துல் அஜிஸ்.

அதே வேளையில் நீண்ட காலத்துக்கு முன்பு தாம் அம்னோ உறுப்பினராக இருந்ததை வான் அகமட் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் எந்தத் தொகுதி என்பது தமக்கு நினைவில் இல்லை என அவரும் கூறினார். சைபுதின் தமது தோற்றத்துக்குக் களங்கத்தை விளைவிக்க முயலுவதாக வான் அகமட்  குற்றம் சாட்டினார்.

1970ம் ஆண்டுகளில் அல்லது 1980ம் ஆண்டுகளில் யாரோ ஒருவர் தம்மை கோம்பாக், டமன்சாரா அல்லது சுபாங் ஜெயா தொகுதியில் பதிவு செய்ததாக அவர் சினார் ஹரியானிடம் தெரிவித்தார்.

தமது குற்றச்சாட்டை மறுக்குமாறு அப்துல் அஜிஸுக்கும் வான் அகமட்டுக்கும் சைபுதின் சவால் விடுத்துள்ளார். தம்மிடம் போதுமான ஆதாரம் இருப்பதாகவும் அவர் அந்த மலாய் நாளேட்டிடம் தெரிவித்தார்.

இசி-யை வழி நடத்தும் பொறுப்பு கொடுக்கப்பட்டதும் அந்த இருவரும் நடு நிலையாக இருக்கும் பொருட்டு தங்கள் உறுப்பியத்தை கை விட்டிருக்க வேண்டும் என சைபுதின் குறிப்பிட்டார்.

என்றாலும் கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் எதிலும் தாம் கலந்து கொள்ளவில்லை என்றும் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை என்றும் அப்துல் அஜிஸ் சொன்னார்.

“வேறு யாராவது கட்சி உறுப்பினராக என் பெயரைப் பதிவு செய்திருந்தாலும் கூட நான் ஒருதலைச் சார்பாக அல்லது பாகுபாடாக நடந்து கொள்வதற்கு அது வழி வகுக்கவில்லை. நான் இங்கு என் தவணைக் காலத்தில் யாருக்கும் கட்டுப்பட்டவனாக உணரவே இல்லை,” எனக் குறிப்பிட்ட அவர், பிரச்னைகளாக மாற்றுவதற்காக “மறந்து போன உண்மைகளை தோண்டுவதாக” சைபுதின் மீது பழி சுமத்தினார்.

தீவிர உறுப்பினர் அல்ல

அதே வேளையில் வான் அகமட், தாம் கட்சி நடவடிக்கையில் அல்லது கூட்டங்களில் பங்கு கொண்டது இல்லை என வலியுறுத்தினார். தாம் இன்னும் உறுப்பினரா என்பது கூட தமக்குத் தெரியாது என்றார் அவர்.

“நான் அரசியல்வாதி அல்ல. நான் இன்று வரை அரசு ஊழியன். நான் உண்மையைப் பேசுகிறேன்,” எனக் குறிப்பிட்ட வான் அகமட் (ஒய்வு பெற்ற பின்னர் இசி-க்கு நியமிக்கப்பட்டார்) தமது உறுப்பிய நிலை பற்றி தாம் ஒரு போதும் சோதிக்கவில்லை என்றார்.

“எல்லா அரசு ஊழியர்களும் எந்த ஒரு கட்சியிலும் தீவிரமாக பங்கேற்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ய விரும்பினால் பதவி துறக்க வேண்டும். நான் இன்னும் சேவையில் இருக்கிறேன். நான் தீவிர உறுப்பினர் அல்ல என்பதற்கு அதுவே தக்க சான்று,” என்றார் அவர்.

“சைபுதின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் “அவதூறானவை, முதிர்ச்சி அடையாதவை”. தமது தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவை என்றும் வான் அகமட் குறிப்பிட்டார்.

“தேர்தல் நடைமுறைகளுக்கு உதவியாக சிறந்த சேவைகளை வழங்கும் பொறுப்பை இசி கொண்டுள்ள வேளையில் ஏன் என்  மீது குறி வைக்க வேண்டும்.”

அந்த விஷயத்தை எழுப்பியதற்கான நோக்கத்தை கண்டறிய சைபுதினைச் சந்திப்பதற்கு தாம் முயலப் போவதாகவும் அவர் சொன்னார்.

“இசி வெளிப்படையாக இயங்கவில்லை என்றால் கடந்த தேர்தலில் எப்படி எதிர்க்கட்சிகள் நிறைய இடங்களை வென்றன? இசி தனது கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுக்கிறது. அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

TAGS: