நாளை தொடக்கம் மே முதல் தேதி வரை கோலாலம்பூர் டத்தாரான் மெர்தேக்கா சுற்று வட்டத்தில் பெர்சே 3.0 காணப்படுவதற்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அந்தத் தகவலை இன்று பெர்சே அமைப்பு வெளியிட்டது.
அந்தத் தடையில் டத்தாரானுக்குச் செல்லும் சாலைகளும் சுற்றியுள்ள நிலப்பரப்பும் அடங்கும் என நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆணை குறிப்பிட்டது.
டத்தாரானைப் பயன்படுத்துவதற்கு மாநகராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கு பெர்சே தவறி விட்டதால் அந்தத் தடை விதிக்கப்படுவதாக அந்த ஆணையை வெளியிட்ட கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஸாக்கி அஸ்ராப் ஜுபிர் கூறினார்.
“கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்திம் அனுமதி இல்லாமல் அல்லது டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவருக்கு தகவல் கொடுக்காமல் பெர்சே 3.0 தனது பேரணியை நடத்தும் என்பதை இந்த நீதிமன்றம் கண்டு பிடித்துள்ளது.”
“பொது ஒழுங்கிற்கு அல்லது பொது வாழ்க்கைக்கு அல்லது பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய மருட்டல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கை அவசியம்,” என்றும் அவர் சொன்னார்.
அந்த வேண்டுகோளின் அவசர நிலையைக் கருத்தில் கொண்டால் “அந்த தடை ஆணை முழுமையாக அவசியமாகிறது” என்றும் ஸாக்கி கூறினார்.
“ஆகவே டத்தாரான் மெர்தேக்காவில் அதாவது ஜாலான் சுல்தான் ஹிஷாமுடின், ஜாலான் ராஜா, ஜாலான் கிளாப் ஆகியவற்றை எல்லையாகக் கொண்ட நிலப்பரப்பில் (சிலாங்கூர் ராயல் கிளப் அமைந்துள்ள பகுதி தவிர) எந்த ஒரு கூட்டத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. 2012ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி முதல் 2012ம் ஆண்டு மே முதல் தேதி வரை எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது,” என அந்த ஆணையின் வாசகம் கூறுகிறது.
பெர்சே தலைவர் எஸ் அம்பிகா, “ஏற்பாட்டாளர்கள்”, “பொதுமக்கள்” என்ற பெயருக்கு அந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.
‘ஆட்சேபத்துடன்’ கையெழுத்திடப்பட்டது
அந்த ஆணை அடங்கிய ஆவணத்தை பெர்சே இன்று நண்பகல் “ஆட்சேபத்துடன்” ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.
இதனிடையே குந்தியிருப்புப் போராட்டம் நிகழவிருக்கும் டத்தாரான் மெர்தேக்காவை டிபிகேஎல் இன்று காலை தொடக்கம் மூடத் தொடங்கியுள்ளது.
அந்தப் பேரணி ‘பாதுகாப்புக்கு மருட்டல் அல்ல’ என உள்துறை அமைச்சர் இரண்டு முறை கூறியுள்ளதற்கு மாறாக இன்றைய மாற்றங்கள் அமைந்துள்ளன.
தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி நாளை குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்துவதில் பெர்சே பிடிவாதமாக இருக்கிறது. அண்மையில் தேர்தல் குற்றங்கள் சட்டத்துக்கு செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் அந்தப் பேரணியை நியாயப்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவித்தது.
கடந்த ஜுலை மாதத்தைக் காட்டிலும் அதிகமான கூட்டத்தை பெர்சே 3.0க்கு ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு பத்தாயிரக்கணக்கான மக்கள் பேரணியில் கலந்து கொண்டார்கள்.
“குந்தியிருப்பு பாதுகாப்பானது என நாங்கள் நம்புகிறோம். காரணம் அதிகமான மக்கள் கலந்து கொண்டு எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருந்தால் போலீசார் முறையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்,” ஏற்பாட்டுக் குழு உறுப்பினரான வோங் சின் ஹுவாட் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“அதிகாரிகள் வன்முறையைக் கொண்டு எங்களை ஒடுக்க முயன்றால் இந்த நாடு நஜிப் நிர்வாகத்தினால் எப்படி நடத்தப்படுகிறது என்பதை உலகம் அறிந்து கொள்ளும்.”
2009ம் ஆண்டு பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டு 2008 தேர்தல் இழப்புக்களைச் சரி செய்வதற்காக அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வாக்குறுதி அளித்த நஜிப்புக்கு நெருக்குதல் கொடுக்கும் முக்கிய அமைப்பாக பெர்சே திகழ்கிறது.
“பெர்சே பேரணிக்கு மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடினால் நஜிப் தமது தேர்தல் வியூகத்தில் சில திருத்தங்களைச் செய்வார்,” என மெர்தேக்கா மய்யம் என்னும் ஆய்வு நிறுவன இயக்குநர் இப்ராஹிம் சுபியான் ராய்ட்டரிடம் கூறினார்.