மலேசியத் தேர்தல் ஆணையம் பின்தங்கியுள்ளது என்கிறது உண்மை நிலை அறியும் குழு ஒன்று

மலேசியாவில் ஜனநாயகம் பலவீனமாக இருப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் பின் தங்கியிருப்பதே காரணம் என இந்த நாட்டில் தேர்தல்கள் மீது உண்மை நிலை அறிய வந்துள்ள குழு ஒன்றின் பாகிஸ்தானிய உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

நேற்று அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானிய செனட்டர் மீர் ஹாசில் கான் பிஜென்சோ அவ்வாறு சொன்னார்.  நவீனமடைந்துள்ள ஒரு நாடான மலேசியாவில் வளர்ச்சி குன்றிய தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்டு தாம் வியப்படைந்ததாக அவர் தெரிவித்தார்.

“பாகிஸ்தான் போன்ற ஒரு நாடு கூட மின்னியல் வாக்களிப்பு முறை வெகு காலத்துக்கு முன்பே அறிமுகம் செய்து விட்டது,” என்றார் அவர்.

அந்தக் குழு உறுப்பினர்களை சந்தித்த தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார், உறுப்பினர்கள் எழுப்பிய பல சீர்திருத்தங்களுக்கு பட்டும் படாமலும் பதில் அளித்ததாக அவர் சொன்னார்.

“தேர்தல் ஆணையம் மேம்படுத்தப்பட வேண்டும். அந்த அமைப்பு மேம்பாடு கண்டால் மட்டுமே நாட்டில் ஜனநாயகம் மேம்பாடு காணும்.”

அந்த அனைத்துலகக் குழுவில் எழுவர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பலர் தங்கள் நாடுகளில் அரசியல்வாதிகள் ஆவர். எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று அவர்கள் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 29 வரை இங்கு பயணம் மேற்கொண்டனர்.