கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
“நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன,” என அவர் சொன்னார்.
நஜிப் நேற்றிரவு கோலாலம்பூரில் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அந்தப் பேரணி பற்றி தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த பல நிருபர்களை போலீசார் குறி வைத்து தாக்கியதாக கூறப்படுவது மீது எழுப்பப்பட்ட கேள்விக்கு நஜிப் பதில் அளித்தார்.
“கும்பல் உணர்வை எதிர்நோக்கும் போது போலீசாரும் அழுத்தத்திற்கு இலக்காகின்றனர். அவர்களுடைய சகாக்கள் அடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கார் கவிழ்க்கப்பட்டுள்ளது. நிருபர்களாகிய நீங்கள் மட்டுமல்ல. போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார் அவர்.
அண்மைய வரலாற்றில் அந்த மிகப் பெரிய பேரணி பற்றிய செய்திகளை சேகரித்துக் கொண்டிருந்த நிருபர்களை கையாளுவதில் போலீசார் தங்களது எல்லையைத் தாண்டியிருந்தால் உள்துறை அமைச்சு பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என பிரதமர் உறுதி அளித்தார்.
“பத்திரிக்கையாளர்களை கையாளுவதில் போலீசார் மித மிஞ்சி செயல்பட்டிருந்தால் நாங்கள் அதனை விசாரிப்போம். நடவடிக்கை எடுப்போம்.”
“நாங்கள் எதனையும் மறைக்க மாட்டோம். பெர்சே ஆர்ப்பாட்டத்தின் போது வேலை செய்த நிருபர்கள் பற்றி நானும் கவலை கொள்கிறேன்,” என்றார் நஜிப்.
‘தவறு செய்தவர்கள் மீது குற்றம் சாட்டப்படும்’
போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களின் போது பலர் காயமடைந்ததற்கு யார் பொறுப்பு என்றும் பிரதமரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் யார் மீதும் பழி போட மறுத்து விட்டார்.
“முதலில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நாங்கள் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. சட்ட ஆட்சி பின்பற்றப்பட வேண்டும். நேர்மையான குறிக்கோளுடன் கூடிய விசாரணை நிகழ வேண்டும். சட்டத்துறைத் தலைவர் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுப்பார்.”
சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் விடுத்துள்ள கோரிக்கைக்குப் பதில் அளித்த நஜிப், போலீசார் தங்களது விசாரணையை முதலில் முடித்துக் கொள்வதற்குக் காத்திருப்பது நல்லது என்றார்.
சமூக ஊடகங்கள் வழியாகவும் இணையம் வழியாகவும் போலீஸ் அராஜகம்- அவை உண்மையாக இருந்தாலும் பாதி உண்மையாக இருந்தாலும்-பற்றியும் கைதுகள் பற்றிய திரும்பத் திரும்பக் கூறுவதின் வழி பொது மக்களுடைய கருத்துக்களை திசை திருப்ப ‘சில தரப்புக்கள்’ முயலுவது பற்றியும் நஜிப் வருத்தம் தெரிவித்தார்.
ஆகவே அன்றைய தினம் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்குவதற்குப் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“நாங்கள் மறைப்பதற்குக் காரணமே இல்லை. மக்கள் வெளிப்படையான போக்கை விரும்புவதால் போலீசார் நிருபர்களை சந்தித்து தங்களது வீடியோ ஒளிப்பதிவுகளை வெளியிடுவது பற்றி பொது மக்களுக்குத் தெரிவிப்பார்கள்.”
“நாங்கள் நடந்ததை அம்பலப்படுத்துவோம். மக்கள் அதனைப் பார்த்து முடிவு செய்யட்டும்,” என்றார்அவர்.