இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. சபை பொது செயலாளர் பான்கி மூன், மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று மியான்மர் தலைநகர் யங்கூன் சென்றடைந்தார்.
ஐ.நா. உட்பட உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக மியான்மரில் அண்மையில் ஜனநாயக ரீதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடந்தது. அதில், ஆங் சான் சூசி தலைமையிலான தேசிய ஜனநாய கட்சி 45ல் 43 இடங்களை கைப்பற்றியது. இதை தொடர்ந்து தற்போது உலக நாடுகளின் கவனம் மியான்மர் பக்கம் திரும்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பான் கி மூன், நேற்று மியான்மர் சென்றார். அங்கு 3 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு அதிபர் யு தெயின் செயினை இன்று சந்திக்கிறார். அப்போது, நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நடக்கும் மறுஆய்வுகள் குறித்து விவாதிக்க உள்ளார். அதை தொடர்ந்து ஆங் சான் சூசியையும் சந்தித்து பேசுகிறார்.
முன்னதாக, மூன் கூறுகையில், மியான்மரில் மாற்றங்களைக் கொண்டுவருவதில் பல சவால்கள் உள்ளன. இருப்பினும் முன் எப்போதும் இல்லாத வகையில் மியன்மருக்கு உதவ உலக நாடுகளை வலியுறுத்துவேன். அண்மையில் நடந்த இடைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.