கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே 3.0 ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தைக் கொண்டது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
“தேர்தல் நடைமுறையின் வழி மக்கள் தங்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான அதிகாரத்தைக் கொடுக்க மாட்டார்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும்,” என அவர் இன்று பிற்பகல் புத்ராஜெயாவில் கூறினார்.
“மக்கள் எழுச்சியின் மூலம் அரசாங்கத்தை வீழ்த்தி தங்களை புதிய ஆட்சியாளர்களாக நியமித்துக் கொள்வது தான் அவற்றுக்கு உள்ள ஒரே வழி.”
‘Doctor in the House: The memoirs of Tun Dr Mahathir Mohamad’ என்னும் தலைப்பிலான தமது புத்தகத்தின் மலாய் மொழிப் பதிப்பை வெளியிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
அந்நியச் சக்திகளின் துணையுடன் ஆட்சி மாற்றத்துக்கான தேவையை உருவாக்குவதற்கு நாட்டின் நிலைத்தன்மையைச் சீர்குலைப்பதே அந்த ஆர்ப்பாட்டத்தின் எண்ணமாகும்.”
“அவை இந்த நாட்டை சர்வதிகாரிகள் ஆட்சி செய்வதை விரும்புவதால் கலவரங்கள் மூட்டப்படுகின்றன.
அந்நியர்கள் விமானங்களைக் கொண்டு வந்து கோலாலம்பூர் மீது குண்டுகளை வீசினால் அவை மகிழ்ச்சி அடையும். ‘நான் இந்த நாட்டுக்கு நல்லதைச் செய்து விட்டேன்’ என அவை கூறிக் கொள்ளும். இது தான் எதிர்த்தரப்பும் பெர்சே-யும் ஆகும்.”
அரசாங்கங்கள் வீழ்த்தப்பட்ட நாடுகளில் நடத்தப்படும் தேர்தல்களில் ‘99.9 விழுக்காடு’ வாக்குகள் அப்போதைய ஆட்சியாளர்களுக்கு சென்றுள்ளன என்றார் மகாதீர்.
ஆனால் மலேசியாவில் அப்படி இல்லை. 2008ல் சிலாங்கூர், பேராக், பினாங்கு, கெடா, கிளந்தான் ஆகியவையும் அதற்கு முன்னர் திரங்கானுவும் சபாவும் கூட எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளதால் பொதுத் தேர்தல் தாமதப்படுத்தப்படுமா என்னும் கேள்விக்குப் பதில் அளித்த அவர், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு ஆலோசனை கூறும் நிலையில் தாம் இப்போது இல்லை என்றார்.
“நான் பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் வேலையில் இல்லை. அது என்னால் முடியுமானால் அவர் செய்ய வேண்டும் என நான் விரும்பும் பல விஷயங்கள் என் மனதில் உள்ளன,” என்று அந்த முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்.
“மக்கள் செவி சாய்த்தால் பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது போலீஸ் கார் ஒன்றை கவிழ்த்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நான் யோசனை கூறுவேன் என மகாதீர் புன்னகையுடன் கூறினார்.
‘அன்வார் தாக்கி விட்டு ஒடி விடும் மனிதர்’
டாத்தாரான் மெர்தேக்காவில் தடுப்புக்கள் மீறப்படுவதற்கு முன்னர் பிகேஆர் மூத்த தலைவரான அன்வார் கட்சித் துணைத் தலைவர் அஸ்மின் அலி-க்கு சைகை காட்டுவதைக் காட்டும் வீடியோ ஒளிப்பதிவு பற்றிக் குறிப்பிட்ட மகாதீர், தாம் பதவியில் இருந்த காலத்திலும் அது தான் நிகழ்ந்தது என்றார்.
“அது தான் அன்வாருடைய இயல்பு. நான் பிரதமராக இருந்த காலத்தில் அவர் கடைசியாக ஆர்ப்பாட்டம் செய்த போது அவர் மக்களைத் தூண்டி விட்டு விட்டு காணாமல் போய் விடுவார்.”
“அது வழக்கமானது. அது தான் அன்வார் இப்ராஹிமின் வழி முறை. அவர் மக்களைத் தூண்டி விட்டு ஒடி விடுவார். அப்போது தான் மக்கள் அவர் மீது குற்றம் சாட்ட மாட்டார்கள்.”