எம்.பியாக பதவியேற்றார் ஆங் சான் சூகி

மியான்மர் நாட்டின் ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூசி (66) நேற்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று கொண்டார். ராணுவ ஆட்சியை எதிர்த்ததால் கடந்த 25  ஆண்டுகளாக வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூசி அரசு பதவியில் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. மியான்மர் நாட்டில் ஜனாதிபதி தெய்ன் செய்ன் தலைமையில் ராணுவ ஆதரவு ஆட்சி நடந்து வருகிறது. மியான்மரில் நீண்ட காலமாக ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு ஜனநாயக ஆதரவு தலைவர் ஆங் சான் சூசி மிகப் பெரிய அளவில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார்.

போராட்டத்தை நசுக்கிய ராணுவத்தினர் ஆங் சான் சூசியை சிறையில் அடைத்தனர். கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு சிறையில் இருந்த அவரை சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல் மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக கடந்த ஆண்டு அரசு விடுதலை செய்தது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சூசி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டார். இதில் அவரது தேசிய ஜனநாயக லீக் கட்சியை சேர்ந்த 44 பேர் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து எம்.பி.யாக சூசி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் ராணுவ தளபதி ஜூண்டா உருவாக்கிய நாயப்பிடாவ் நகரில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது.

தற்போது ராணுவ ஆதரவாளர்கள் நிறைந்த நாடாளுமன்றத்தில் சூசியின் கட்சியை சேர்ந்த குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் ஜனநாயக உரிமைகளை வாதாடி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் அவர் மக்கள் பிரச்னைகளை ஓங்கி ஒலிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 2015ல் வரக் கூடிய பொதுத் தேர்தலில் சூசியின் கட்சி மிகப் பெரிய வெற்றியை பெறலாம் என தெரிகிறது.