ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினார் என்று ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென் பற்றி வெளியிட்ட செய்திக்காக நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மன்னிப்பு கோரியுள்ளது.
அதன் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அறிக்கைகளில் “பெரும் தவறு” இழைக்கப்பட்டுள்ளது என்று என்எஸ்டி கூறியுள்ளது.
“அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஸென்னபென்னின் நாடாளுமன்ற உரையில் அவர் “இஸ்லாம்” என்ற சொல்லை பயன்படுத்தவில்லை, மற்றும் இஸ்லாம் ஒரு சமய அமைப்பு அல்ல என்று அவர் வலியுறுத்தவில்லை என்பதோடு அது சமய நம்பிக்கைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு கிரிமினல் அமைப்பு என்றும் அவர் கூறவில்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
“மேற்கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக, ஸென்னபென்னுக்கு எதிராக அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் இதன் மூலம் முழுமையாக திரும்பப் பெற்றுக்கொள்கிறோம். அந்தக் கட்டுரையால் அவருக்கு ஏற்பட்டுள்ள பெரும் துன்பம் அல்லது வேதனைக்கு நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்.
“மேலும் நாங்கள் செய்த தவறுக்கு மன வருந்தம் தெரிவிக்கும் முறையில், அக்கட்டுரையை எங்களுடைய நாளிதழின் இணையதள பதிப்பிலிருந்து உடனடியாக அகற்றியுள்ளோம்”, என்று அந்த அறிக்கை கூறுகிறது.
என்எஸ்டி அதன் மே 2 ஆம் தேதி பதிப்பில் “இஸ்லாம் ஒரு சமய அமைப்பல்ல. சமய நம்பிக்கைகள் என்ற அதன் கூற்றுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு கிரிமினல் அமைப்பு அது”, என்று ஸென்னபென் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசியதாக எழுதியிருந்தது.
ஸென்னபென் ஓர் இன திருமணத்தை ஆதரிப்பவர் என்றும் அக்கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
ஸென்னபென்: எனக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி
சிட்னி மோர்னிங் ஹெரால்ட் (எஸ்எம்எச்) என்ற நாளிதழ் அதன் செய்தியில் ஸென்னபென் “இஸ்லாம்” என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்று கூறியது. அவரது உரையின் பொருள் (1950 இல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய செயல்முறை சார்ந்த விஞ்ஞான கோட்பாடு) “சைன்டோலஜி” ஆகும்.
பிகேஆர் நடப்பில் தலைவரான அன்வார் இப்ராகிம்மின் நண்பரான ஸென்னபோனை களங்கப்படுத்தும் நோக்கத்தோடு என்எஸ்டியின் கட்டுரையில் “சைன்டோலஜி” என்ற சொல்லை எடுத்துவிட்டு “இஸ்லாம்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று எஸ்எம்எச் செய்தி வெளியிட்டது.
“ஆளுங்கட்சி (அன்வாருக்கு) எதிராகச் செய்யும், பயன்படுத்தும் நாணயமற்ற அரசியல் சூழ்ச்சிகளுக்கு அந்தச் சொல் மாற்றம் ஓர் எடுத்துக்காட்டாகும்”, என்று அவர் (ஸென்னபென்) கூறியதாக எஸ்எம்எச் எழுதியுள்ளது.
பெர்சே 3.0 பேரணியைக் காண வந்த பல வெளிநாட்டு கண்காணிப்பாளர்களில் ஸென்னபென்னும் ஒருவர். அப்பேரணி குறித்து உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அதில் பங்கேற்றவர்களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து அவர் மனநிறைவடையவில்லை.