அரசாங்கம் உயர் கல்வியைத் தாராளமாக்கியது சரியான நடவடிக்கை என்கிறார் பிரதமர்

உயர் கல்வித் துறையை தாராளமாக்குவது என அரசாங்கம் 1996ம் ஆண்டு எடுத்த முடிவு சரியானது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியிருக்கிறார்.

அதன் விளைவாக அதிகமான மாணவர்கள் உள்நாட்டில் உயர் கல்வியைத் தொடருவதற்கு வகை செய்யப்பட்டது என அவர் சொன்னார்.

“1996ம் ஆண்டுக்கான தனியார் உயர் கல்வி நிலையங்கள் சட்டம், தனியார் துறையும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களும் அந்நிய கல்வி அமைப்புக்களும் இந்த நாட்டில் இரட்டைக் கல்வித் திட்டத்துடன் பல்கலைக்கழகங்களையும் கிளை வளாகங்களையும் அமைப்பதற்கு  ஊக்கமூட்டின.”

“நீலப் பெருங்கடல் வியூகம் என்ற சொற்றொடர் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. தகுதி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் உள்நாட்டு உயர் கல்விக் கூடங்கள் இடமளிக்க முடியாத சூழ்நிலையிலும் வெளிநாட்டுக் கல்வியை அனைத்து மலேசியர்களும் தாங்கிக் கொள்ள இயலாத சூழ்நிலையிலும் மலேசியர்களுக்கு அந்தப் பல்கலைக் கழகங்களும் கிளை வளாகங்களும் அதிகமான இடங்களை வழங்கின,” என்று அவர் விஸ்மா மசீச-வில் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் கூறினார்.

அந்த நிகழ்வின் போது மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கும் உயர் கல்வித் துணை அமைச்சர் ஹாவ் கோக் சுங்-கும் பல்கலைக்கழகத் தலைவர் சுவா ஹியான் தெய்க்கும் கலந்து கொண்டிருந்தனர்.

மனித மூலதன மேம்பாட்டில் முதலீடு செய்ய தயாராக இருந்ததும் நாடு என்னும் முறையில் மலேசியாவை நல்ல நிலையில் வைத்துள்ளது என்றும் நஜிப் சொன்னார்.

ஒரு தலைமுறையில் மலேசியா, குறைந்த வருமானத்தைக் கொண்ட விவசாயப்  பொருளாதாரத்திலிருந்து மேல் நடுத்தர வருமானத்தைக் கொண்ட நவீன தொழிலியல் பொருளாதாரமாக மாறியுள்ளது என்றார் அவர்.

“புத்தாக்கத்துக்கும் உயர்ந்த வருமானத்தைக் கொண்ட உற்பத்தித் திறனுக்கு அடிப்படையாக விளங்குவது மனித மூலதனமாகும்.”

பொருளாதார மாற்றங்களுக்கு இணையாக தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய உயர்ந்த தேர்ச்சியைப் பெற்ற மனித ஆற்றல் இல்லை என்றால் அந்தப் பொருளாதாரமும் வெற்றி பெற முடியாது,” என்றார் நஜிப்.

பட்டதாரிகளுக்கு வாழ்த்துக் கூறிய அவர், நாட்டை மென்மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு அவர்களைச் சார்ந்திருப்பதாகச் சொன்னார்.

“உண்மையிலேயே கல்வி கற்றவர்களுக்கு  அடையாளங்கள் எனக் கருதப்படும் நேர்மை,  வெளிப்படையான போக்கு, நெறிமுறைகள், தார்மீகப் பண்புகள் ஆகியவற்றை விட்டுக் கொடுக்காமல் பொறுப்புணர்வுடன் நீங்கள் வெற்றி பெறுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.”

பிரதமர் இன்றைய பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை பெற்றுக் கொண்ட மொத்தம் 2,773 பட்டதாரிகளில் 60 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

பெர்னாமா