உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர்

உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் கழகம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அது மலேசிய இதழியல் துறைக்கு புதிய கால கட்டத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகை இல்லை.

பல மூத்த பத்திரிக்கையாளர்களும் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுமான 80 பேர் நேற்றிரவு தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூடி அந்த புனிதமான தொழிலுக்கு மேலும் மெருகு ஊட்ட சுயேச்சையான அமைப்பு ஒன்றை தோற்றுவிப்பது பற்றி விவாதித்தனர்.

அனைத்து பத்திரிக்கையாளர்களையும் பிரதிநிதிப்பதற்கு ஒர் அமைப்பு தேவை என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். அந்த அமைப்பு தேசியப் பத்திரிக்கையாளர் சங்கமும் தேசிய பத்திரிக்கைக் கழகமும் நடவடிக்கை எடுக்க முடியாத இதழியல் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மீது கருத்துக்களை வெளியிடும்.

“அந்த பத்திரிக்கையாளர் கழகம், தங்களது தொழில்களின் நலன்களை பாதுகாத்து அவற்றின் தரத்தை உயர்த்தும் கடமையைக் கொண்டுள்ள வழக்குரைஞர் மன்றம், மலேசிய மருத்துவ சங்கம், பொறியியலாளர் கழகம் ஆகியவற்றைப் போன்று இயங்க வேண்டும்.”

“நாளைய மலேசியாவும் நாளைய இதழியல் துறையும் நாம் இன்று எடுக்கின்ற நடவடிக்கையைப் பொறுத்தே இருக்கும்,” என மூத்த பத்திரிக்கையாளரும் முன்னாள் தி ஸ்டார் நாளேட்டின் நிர்வாக ஆசிரியருமான கோபிந்த் ருத்ரா கூறினார். அவர் பத்திரிக்கையாளர் கழகத்துக்கு பின்னணியில் உள்ள அம்சங்களை கூட்டத்தினருக்கு விளக்கினார்.

பின்னர் அந்தக் கழகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சின் சியூ நாளேட்டின் தலைமை ஆசிரியர் சியூ நியோக் சாவ், மலேசியா இன்சைடர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாஹாபார் சாதிக். கோபிந்த் ஆகியோரைக் கொண்ட குழு ஒன்றை அமைக்கும் தீர்மானத்தை கூட்டத்தினர் ஏற்றுக் கொண்டார்கள்.

பத்திரிக்கையாளர் கழகம் அரசியல் சார்பற்றதாக இயங்குவதுடன் வெளிப்படையாகவும் கருத்துக்களைத் தெரிவிக்கும்.

அந்தக் குழு பத்திரிக்கையாளர் கழகத்தை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள வன்முறைகளை அரசாங்கம் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மனு ஒன்றையும் சமர்பிக்கும் என கோபிந்த் சொன்னார். அந்த மனுவில் 2,500க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டிருப்பார்கள்.

கடந்த சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணியின் போது பத்திரிக்கையாளர்களிடம் போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பதால் அந்தக் கழகம் அரசியல் சார்பற்றதாக இயங்குவதுடன் வெளிப்படையாகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என கூட்டத்தில் பங்கு கொண்டவர்கள் தெரிவித்தனர்.

“அந்த வன்முறை முன்பு எப்போதும் நிகழ்ந்திராதது. நாம் உறுதியாக ஒரு நிலையை எடுக்க வேண்டும். நமது ஊடக பெயர்ப் பட்டையை அனைவரும் மதிக்க வேண்டும்.”

“நமது தொழிலை தற்காப்பதற்கு அந்த அமைப்பு மேலும் தீவிரமான அணுகுமுறையைப் பின்பற்றும்,” என மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் நம்பிக்கை தெரிவித்தார்.