‘அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஊடகங்கள் இன்னும் பிஎன் கட்டுக்குள் தான் உள்ளன’

அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் அண்மையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும் மலேசிய அச்சு ஊடகங்கள் மீது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இன்னும் நிறைவான கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக சுயேச்சை இதழியல் மய்யம் ( Centre for Independent Journalism-CIJ) கூறுகிறது.

காரணம் கோரும் கடிதங்கள், ‘ஆலோசனை’ கூறுவதற்கான ஊடகங்களை அழைப்பது, உள்துறை அமைச்சுக்கு பத்திரிக்கையாளர்களை அழைப்பது போன்ற நடைமுறைகள் இன்னும் தொடருவதாக அது குறிப்பிட்டது.

அவற்றின் வழி பிஎன் ஊடகங்கள் மீது தனது செல்வாக்கை பயன்படுத்துகிறது. அதன் விளைவாக ஊடக சுதந்திரத்துக்கு “பாதகமான சூழ்நிலைகள்” உருவாக்கப்பட்டுள்ளன என அந்த மய்யம் விடுத்த ஊடக அறிக்கை கூறியது.

“அந்தத் தலையீடுகள் காரணமாக மனச்சாட்சியுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது அன்றாட வேலையில் நன்னெறிகளை பின்பற்ற முடியாமல் போகிறது. அதனால் அவர்கள் தாங்களாகவே சுய தணிக்கை செய்து கொள்கின்றனர் அல்லது வேண்டுமென்றே நன்னெறிகளுக்கு மாறாக செய்திகளைப் போடுகின்றனர்.”

அண்மைய பெர்சே 3.0 பேரணி குறித்து வெளியான தகவல்களை கருத்தில் கொண்டு துல்லிதமாக தகவல்களை வெளியிடுவது மிகவும் “அவசரம் அவசரமாகியுள்ளது” என்றும் CIJ குறிப்பிட்டது.

ஆஸ்ட்ரோவில் பிபிசி செய்தி தணிக்கை செய்யப்பட்டது, நிருபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி  ஹரியான் மெட்ரோவும் உத்துசான் மலேசியாவும்  தவறான தகவல்களைக் கொடுத்தது, ஆஸ்திரேலிய செனட்டர் நிக்கோலஸ் செனபோன் இஸ்லாத்துக்கு எதிரானவர் என நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் கதை திரித்தது ஆகிய எடுத்துக்காட்டுக்களையும் அந்த மய்யம் சுட்டிக் காட்டியது.

கடந்த சனிக்கிழமையன்று பெர்சே பேரணியின் போது ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் வன்முறையயையும் CIJ கண்டித்தது. அந்த வன்முறைகள் ‘அதிர்ச்சி அளிக்கின்றன’ என்றும் அந்தத் தாக்குதல்கள் பற்றி ஊடகங்கள் தகவல் கொடுக்காமல் அல்லது தவறான தகவலை கொடுத்ததால் அந்தப் பிரச்னை மேலும் கடுமையாகியது.

உலக பத்திரிக்கை சுதந்திர தினம், அண்மைய பெர்சே பேரணி, ஊடகங்கள் மீது வன்முறைகள் அவிழ்த்து விடப்பட்டதை மலேசியாகினி ஆட்சேபித்துள்ளது ஆகியவற்றுக்கு பின்னணியில் CIJ ஊடக அறிக்கை வெளியாகி உள்ளது.

மலேசியாவில் தடைகளும் அரசியல் கட்டுப்பாடுகளும் இருப்பதால் இங்கு உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு காரணமே இல்லை என அந்த அரசு சாரா அமைப்பு வருத்ததுடன் குறிப்பிட்டது.

உண்மையில் அந்தக் கட்டுப்பாடுகள் இவ்வாண்டு ‘மேலும் மோசமடைந்தன’ என அது கூறியது.

அரசாங்கம் முக்கிய ஊடகங்கள் மீது இன்னும் அதிகமான செல்வாக்கைப் பெற்றுள்ளது என்று கூறிய அது  சுதந்திரனான நியாயமான ஊடகங்களுக்கான தங்களது உரிமைகளை மக்கள் “மீட்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டது.

“மாறாத உண்மை நிலை இதுதான்: மலேசிய அச்சு ஊடகங்கள் மீது பிஎன் அரசாங்கத்துக்கு இன்னும் நிறைவான கட்டுப்பாடு உள்ளது.”

“மக்கள் சுதந்திரமான நியாயமான தேர்தலை விரும்பினால் சுதந்திரமான நியாமான ஊடகங்களை பெற்றிருப்பது முக்கியம் என்பதை  உணர வேண்டும்,” என்றும் CIJ கூறியது.