பெர்சே 3.0 பேரணி மீது வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தை நடத்துகிறது

கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி தொடர்பிலான விசயங்களை விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தைக் (இஜிஎம்) கூட்டுகிறது.

அந்த இஜிஎம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் அடுத்த வெள்ளிக்கிழமை நிகழும் என அந்த மன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரத்துவச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெர்சே 3.0, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி நடந்த பொதுப் பேரணியை சூழ்ந்துள்ள விசயங்கள், நிகழ்வுகள் தொடர்பில்” வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ முன்மொழிந்துள்ள தீர்மானத்தை விவாதிப்பதும் அவை சம்பந்தப்பட்ட மற்ற விசயங்களை விவாதிப்பதும்  இஜிஎம்-மின் முக்கிய அம்சங்களாகும்.

அந்தச் சுற்றறிக்கையில் அதனைத் தவிர மேல் விவரங்கள் ஏதும் தரப்படவில்லை.

இஜிஎம் நடைபெறுவதற்கு மொத்தம் 500 உறுப்பினர்கள் (கோரம்) அவசியம் கலந்து கோள்ள வேண்டும்.

அந்தப் பேரணியை கண்காணிப்பதற்கு 78 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை வழக்குரைஞர் மன்றம் நியமித்திருந்தது. அந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

கடந்த பெர்சே பேரணியின் போது பல போலீஸ் குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் பெர்சே 3.0ன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மேலும் மோசமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரணியின் போது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சிவில் வழக்குகளை சமர்பிப்பதற்காக தொண்டூழிய வழக்குரைஞர்களை சேர்ப்பது பற்றியும் வழக்குரைஞர் மன்றம் யோசிப்பதாகவும் லிம் அறிவித்தார்.

“நாங்கள் எங்கள் உறுப்பினர்களிடம் பேசுவோம். தொண்டு அடிப்படையில் செயல்படுவதற்குப் போதுமான உறுப்பினர்களைத் திரட்ட முடியுமானால் நாங்கள் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட அனைவரையும் பேட்டி கண்டு பெரும்பாலும் சிவில் வழக்குகளைப் போடுவோம்”, என்றார் அவர்.