சைபர் செக்யூரிட்டி மலேசியா ( CyberSecurity Malaysia )என்று அழைக்கப்படும் அமைப்பு சமூக இணையத் தளங்களுக்கு சிறந்த நடைமுறைகள் என்னும் தலைப்பில் புதிய இணைய வழிகாட்டிகளை அறிமுகம் செய்துள்ளது.
சைபர் செக்யூரிட்டி மலேசியா என்பது இணையப் பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்பாகும். அது அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சின் கீழ் இயங்குகிறது.
சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் தனிநபர்களாக இருந்தாலும் சரி, அமைப்புக்களாக இருந்தாலும் சரி, சமூக இணையத் தளங்களின் “இருண்ட பகுதியை” புரிந்து கொள்ளுமாறு செய்வதே அந்த வழிகாட்டிகள் அறிமுகம் செய்யப்படுவதின் நோக்கம் என்று சைபர் செக்யூரிட்டி மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹுசேன் ஜாஸ்ரி இன்று விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“அந்த வழிகாட்டிகளைப் புரிந்து கொள்வதின் மூலம் சமூக இணையத் தளங்களைப் பயன்படுத்துவோர், எதனைச் செய்யலாம், எதனைச் செய்யக் கூடாது என்பதை அறிந்திருக்க இயலும். அதன் வழி அந்த இணையத் தளங்கள் மூலம் அதிக நன்மைகளை நன்மை அடைய முடியும்.”
“சமூக இணையத் தளங்களை கூடுதல் நெறிமுறைகளுடன் பயன்படுத்துவதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகின்றவர்களுடைய பாதுகாப்பையும் தனி நபர் தகவல் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளாக சமூக இணையத் தளங்களுக்கு சிறந்த நடைமுறைகள்’ பயன்படுத்தப்படும்.”
மருட்டல்கள், பலவீனங்கள், அபாயங்கள் ஆகியவற்றை அறியாமல் இருக்கும் போது சமூக இணையத் தளங்களின் பயனீட்டை முறையாக நிர்வாகம் செய்ய முடியாது. அதனால் சிறந்த நடைமுறைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது என ஹுசேன் சொன்னார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் சமூக இணையத் தளங்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 625 சம்பவங்கள் சைபர்999 உதவி மையம் வழியாக சைபர் செக்யூரிட்டி மலேசியாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்தகைய சம்பவங்கள் எண்ணிக்கை 2010 ஆண்டு மொத்தம் 124 சம்பவங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டன.
பெர்னாமா