அஞ்சல் வாக்காளர் யோசனை மீது இசி, அனைத்துலகக் குழுவிடம் பொய் சொல்லியிருக்கிறது

தீவகற்ப மலேசியாவில் வேலை செய்யும் சபா, சரவாக் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அறிமுகம் செய்யும் யோசனையை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது எனத் தேர்தல் ஆணையம்(இசி) அனைத்துலகக் குழு ஒன்றிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)  கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் இசி அந்த யோசனைக்கு ஆதரவளிக்கவில்லை  எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மலேசியத் தேர்தல் முறை குறித்து உண்மை நிலை அறியும் பயணத்தை மேற்கொண்ட எழுவர் கொண்ட அனைத்துலகக் குழு இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமாரை சந்தித்தது.

அப்போது வான் அகமட் அந்தக் குழுவிடம் சொன்னது இது தான்: “அதுதான் மலேசியாவில் உண்மை நிலை. அவர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரியை மாற்ற வேண்டும். சபா, சரவாக் மக்களுக்காக அஞ்சல் வாக்குகள் அறிமுகம் செய்யப்படுவதற்கு சட்டம் இயற்றப்பட வேண்டும் என நாங்கள் பரிந்துரை செய்தோம். ஆனால் எங்கள் யோசனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.”

உண்மையில் வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பாமல் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்கு வெளியூர்களில் வசிக்கும் வாக்காளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது அந்த பிஎஸ்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் ஒன்றாகும்.

அடுத்த பொதுத் தேர்தலில் அதனை அமலாக்க இசி மறுத்து விட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. தகுதி பெற்ற வாக்காளர் ஒருவர் தமது வாக்களிப்புத் தொகுதியில் வசிக்க வேண்டும் என வரையறுத்துள்ள கூட்டரசு அரசமைப்பின் 119வது பிரிவு தொடர்பில் அந்த யோசனையை மேலும் ஆராய்வதற்கு மட்டுமே இசி ஒப்புக் கொண்டது.

இசி நிராகரித்த ஆறு பூர்வாங்க யோசனைகளில் அதுவும் ஒன்றாகும்

தேர்தல் பிரச்சார காலத்தின் போது அரசியல் கட்சிகளுக்கும் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் சமமான இடம் கொடுக்க வேண்டும் என கூட்டரசு அரசமைப்பின் 119வது பிரிவு கூறும் வேளையில் இசி அந்தப் பிரிவின் குறுகிய விளக்கத்தைப் பின்பற்றுவதாகவும் அந்த அனைத்துலகக் குழு கூறியது.

“அனைத்து பொது அமைப்புக்களும் தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுக்கும் போது, நடைமுறைக்கு ஏற்ற வகையில் தனது கடமைகளை ஆணையம் நிறைவேற்றுவதற்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றும்  15(2)வது பிரிவு கூறுவதை சுட்டிக் காட்டிய அந்தக் குழு நியாயமான வகையில் ஊடகங்களில் இடம் கொடுக்கப்படுவதை இசி உறுதி செய்ய முடியும் எனத் தெரிவித்தது.

ஆனால் “போக்குவரத்து உதவிகளை மட்டுமே” பெறுவதற்கு அந்தப் பிரிவு இசி-க்கு அங்கீகாரம் அளிப்பதாக வான் அகமட் பதில் அளித்ததாக அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கை குறிப்பிட்டது.

அந்த விவகாரம் மீதான சந்தேகங்களை போக்குவதற்கும் அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் நியாயமான இடத்தை வழங்குமாறு கட்டாயப்படுத்தவும் தெளிவான சட்டம் இயற்றப்பட வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்தது.

அத்தகைய சட்ட விதிகள் இல்லாத சூழ்நிலையில் இசி தனது தார்மீக அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி பிரச்சார காலத்தின் போது அன்றாடம் பொது, தனியார் தொலைக்காட்சி நிலையங்கள் சமமான இடங்களை வழங்கியுள்ளனவா என்பது மீது அறிக்கை வெளியிடலாம் என்றும் அது யோசனை கூறியது.

தேர்தல் நடைமுறைகளில் இசி-க்கு விரிவான அதிகாரத்தை அரசமைப்பு வழங்கியுள்ளதாகவும் அது வலியுறுத்தியது.

ஆஸ்திரேலிய செனட்டர் Nicholas Xenophon, பாகிஸ்தானிய செனட்டர் Hasil Khan Bizenjo, பிலீப்பீன்ஸ் University of East College  சட்டத் துறை பேராசிரியர் Amado Valdez, ஜெர்மனியின் சுதந்திரத்திற்கான Freidrich Naumann அற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் Juliane Schmucker, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக அரசியல் இணைப் பேராசிரியர் Clinton Fernandes, இந்தியப் பத்திரிக்கையாளர் Jawed Akhbar, இந்தோனிசிய அனைத்துலக அறிஞர்கள் சங்கத் தலைவர் முகமட் நாசிர் தாமாரா தாமிமி ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அலுவலக அழைப்புக்கு இணங்க அவர்கள் ஏப்ரல் 25ம் தேதியிலிருந்து 29ம் தேதி வரை மலேசியாவில் பயணம் செய்து இந்த நாட்டுன் தேர்தல் முறைகளை ஆய்வு செய்தனர்.

இந்த நாட்டில் ஜனநாயகம் பலவீனமாக இருப்பதற்கு இசி “பின் தங்கிருப்பது” காரணம் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை குழு அறிக்கை வெளியிடப்பட்ட போது Bizenjo கூறினார்.

அந்தக் குழு உறுப்பினர்கள் வான் அகமட்-டுடன் அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ், பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா, சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம், அன்வார் ஆகியோரையும் சந்தித்தது.