பக்காத்தான் பெர்சே தகவல் ‘போரை’ தொடங்குகிறது

நொறுக்கப்பட்ட போலீஸ் கார், மோட்டார் சைக்கிள் பற்றிய படங்களை நாட்டின் முக்கியப் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் பெளியிட்டு பெர்சே 3.0ல் பங்கு கொண்டவர்களை வன்முறை கலகக்காரர்கள் என அரசாங்கம் முத்திரை குத்திய ஒரு வாரத்திற்கு பின்னர் அதனை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

“போலீஸ் முரட்டுத்தனத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இப்போது அம்னோ பிஎன் கட்டுக்குள் உள்ள ஊடகங்களில் தாக்கப்படுகின்றனர். அதே வேளையில் வன்முறையில் இறங்கியவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர்,” என பிகேஆஅர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி கொண்டுள்ள ‘நல்ல செய்தியை’ தெரிவிக்க பக்காத்தான் ராக்யாட் நாடு முழுவதும் நடத்தும் இயக்கத்துக்கு பிகேஆர் தலைமை தாங்கும் என ராபிஸி சொன்னார்.

பெர்சே 3.0 வழி ஜனநாயகத்துக்கு கோரிக்கை விடுப்பதில் மக்கள் அடைந்துள்ள வெற்றியில் கவனம் செலுத்துவதுடன் அந்தப் பேரணியின் போது அதிகாரிகள் நடத்திய வன்முறைகளையும் திரையிடும்,” என்றார் அவர்.

“Merdeka Rakyat: Post-Bersih 3.0” (மக்கள் விடுதலை பெர்சே 3.0க்கு பிந்திய கால கட்டம்) என்னும் தலைப்பிலான செராமா நிகழ்வுகள் மே 7ம் தேதி கோம்பாக் பத்து கேவ்ஸில் உள்ள பாடாங் கம்போங் பாருவில் இரவு 9 மணிக்குத் தொடக்கி வைக்கப்படும்.

அந்த நிகழ்வை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைப்பார். அதில் மூத்த பாஸ், டிஏபி தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.

அந்த நிகழ்வில் தேர்தல் ஆணையத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரது நிலை குறித்து அன்வார் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இரண்டு முதுநிலை தேர்தல் ஆணைய அதிகாரிகளும் அம்னோ உறுப்பினர்கள் எனக் கூறப்படுவதால் கட்சிச் சார்பு உடையவர்கள் என வலியுறுத்தி அவர்கள் நீக்கப்பட வேண்டும் என பிகேஆர் வழக்கு ஒன்றைத் தொடுப்பது சம்பந்தமாக அந்த அறிவிப்பு இருக்கும் பிரி மலேசியா டுடே என்ற இணையத் தளம் நேற்று கூறியது.

“அந்த செராமா நிகழ்வுகளும்  ‘Merdeka Rakyat: Post-Bersih 3.0’ விளக்கக் காட்சிகளும் நாடு முழுவதும் நடத்தப்பட்டு நியாயமான ஜனநாயக நடைமுறைகளுக்கான மக்கள் கோரிக்கை தொடருவது உறுதி செய்யப்படும்,” என்றும் ராபிஸி சொன்னார்.