‘புரட்சி முயற்சிக்கு’ எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் ஐஜிபி-க்கள் விரும்புகின்றனர்

ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற பெர்சே 3.0 பேரணியின் போது புரட்சி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுவது மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்று முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர்கள் (ஐஜிபி-க்கள்) கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரித்தா ஹரியானில் இன்று முதல் பக்கச் செய்தியாக அந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டாத்தாரான் மெர்தேக்காவை ஆக்கிரமிப்பதும் இறுதியில் அரசாங்கத்தை வீழ்த்துவதுமே பேரணியின் நோக்கம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொண்டுள்ளதற்கு முன்னாள் உயர் நிலை போலீஸ் தலைவர்களான அப்துல் ரஹிம் முகமட் நூர், மூசா ஹசான், ஹனிப் ஒமார் ஆகியோர் விடுத்துள்ள கோரிக்கை வலுச் சேர்த்துள்ளது.

“பிரதமர் சாதாரணமாக எதனையும் கூற முடியாது என்பதால் அதற்கு ஏதாவது ஒர் அடிப்படை இருக்க வேண்டும். அது நிகழக் கூடும். சொந்த நலனுக்காக அதனைச் செய்வதற்கு காத்திருக்கும் மக்களும் இருக்கவே செய்கின்றனர்.,” என ஹனிப் ஒமார் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பேரணி உண்மையில் எத்தகைய மருட்டலைக் கொண்டுள்ளது என்பதை  பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் அறியாமல் இருக்கலாம். ஆனால் போலீசாருக்கு நன்றாகத் தெரியும். காரணம் வேவுத் தகவல்களைத் திரட்டுவதில் அவர்களுக்கு நிறைய அனுபவம் உண்டு என ரஹிம் நூர் சொன்னார்..

பேரணி நடந்த சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டால் புரட்சி முயற்சி சாத்தியமானதே என்றார் அவர்.

பேரணியில் ஒவ்வொருவரும் மாறுபட்ட நோக்கத்துடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உணர்வுகள் தூண்டப்பட்டு அனல் பறக்கும் உரைகள் நிகழ்த்தப்படும் போது இளைஞர் குழுக்களுடைய வேகம் அதிகரித்து விடும். அது தான் கும்பல் மனோவியல்,” என அவர் சொன்னதாகவும் பெரித்தா ஹரியான் கூறியது.

வெளிநாடுகளில் இதுதான் நிகழ்கின்றது

அந்த இடத்தை ஆக்கிரமிப்பது அரசாங்கத்தை உலுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். அது வெளிநாடுகளில் இயல்பாகி விட்டது. அதனை அவசியம் தடுக்க வேண்டும் என மூசா சொன்னார்.

“அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களும் கலவரங்களும் நிகழ்ந்திருப்பது அதற்கு நல்ல ஆதாரங்களாகும். புரட்சி நடைபெற்றிருந்தால் அது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அதனைத் தொடர்ந்து அவசர காலம் பிறப்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகக் கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டும் தமது வலைப்பதிவில் பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் கூட்டு சேர்ந்து சாலை ஆர்ப்பாட்டங்கள் வழி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

“வெளிநாடுகளில் நிகழ்கின்ற வன்முறை ஆர்ப்பாட்டங்கள் இங்கு நிகழாது என நம்மில் பலர் எண்ணுகிறோம். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கக் கூடும். அன்வார் தொடக்கத்திலிருந்து அதனையே வலியுறுத்தி வருகிறார்.”

“அவர் இப்போது நிக் அஜிஸுடன் கூட்டு சேர்ந்துள்ளார். அரசமைப்புக்கு புறம்பான வழிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அதிகாரத்தை பெற முடியும் என அவர்கள் இருவரும் இப்போது எண்ணுகின்றனர்,” என்றும் மகாதீர் சொன்னார்.