பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தனிப்பட்ட வாழ்க்கை மீதான தாக்குதல்கள் தொடருகின்றன. அண்மையில் செக்ஸ் வீடியோ ஒன்றில் அவர் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. நேற்று அவருடைய தாயார் சே டோம் யாஹாயா தேசியத் தொலைக்காட்சியில் தோன்றி அஸ்மின் குடும்பத்துக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அவரது பேட்டி இன்று உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் உட்பட பல முக்கியமான நாளேடுகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அஸ்மின் சர்ச்சைக்குரிய தமது சகோதரி உம்மி ஹபில்டா மீது ‘பகைமை பாராட்டுவதாக’ சே டோம் அந்த பேட்டியில் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.
குடும்ப வீட்டில் உம்மியைப் பார்த்த பின்னர் ஆத்திரமடைந்த அஸ்மின் குடும்பத்துடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டது பற்றி சே டோம் விவரித்ததாக உத்துசான் மலேசியா தெரிவித்தது.
தமது புதல்வர் “சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“நான் அவரை இன்னும் கை விட வில்லை. ஆனால் அவர் திரும்ப விரும்பினால் இரண்டு நிபந்தனைகளை அவர் நிறைவேற்ற வேண்டும். சரியான பாதைக்குத் திரும்பி அல்லாஹ்-விடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அத்துடன் அந்தக் கும்பலுடன் (பிகேஆர்) இருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.”
“அவரது பல நண்பர்கள் விலகி விட்டனர். அவரும் விலக வேண்டும். பின்னர் அவர் திரும்பலாம்,” என அவர் சொன்னதாக அந்த ஏடு குறிப்பிட்டது.
“அவர் அவ்வாறு செய்யா விட்டால் நான் இறக்கும் தறுவாயில் இருந்தால் கூட நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை. அர்த்தமே இல்லை. நான் உயிருடன் இருக்கும் போது அவர் என்னைப் பார்க்க விரும்பவில்லை. நான் மரணமடையும் போது அவர் என்னைப் பார்க்க வர வேண்டிய அவசியம் இல்லை,” என்றும் சே டோம் சொன்னார்.
அஸ்மினை அவர் “நல்ல மனிதர்” எனக் குறிப்பிட்டதாகவும் அவரை ‘மாற்றியதற்கு’ எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமே காரணம் என அவர் சுட்டிக் காட்டியதாகவும் அந்தச் செய்தியில் எழுதப்பட்டுள்ளது.
“அது அன்வாராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர் முன்னைப் போல் இல்லை. தமது சொந்த சகோதரியைக் கூட அவனால் இப்போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை,” என்று சே டோம் சொன்னார்.