சில ஆர்ப்பாட்டங்கள் ஹராம் என பாத்வா குழு பிரகடனம் செய்கிறது

பயனில்லாத, சட்டத்துக்குப் புறம்பான, நாட்டில் கலவரத்தை மூட்டக் கூடிய ஆர்ப்பாட்டங்களில் அல்லது எந்த ஒரு கூட்டத்திலும் முஸ்லிம்கள் பங்கு கொள்வது ‘ஹராம்’ (அனுமதிக்கப்படவில்லை) என தேசிய பாத்வா குழு பிரகடனம் செய்துள்ளது.

அந்தத் தகவலை அந்தக் குழுவின் தலைவர் அப்துல் சுகோர் ஹுசின் இன்று வெளியிட்டார்.

ஏப்ரல் 28ம் தேதி கூட்டரசுத் தலைநகரில் நிகழ்ந்த தெரு ஆர்ப்பாட்டங்களின் போது சில முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்ட விஷயத்தை பாத்வா குழு கடுமையாக கருதுவதாக அவர் சொன்னார்.

“கலவரத்தில் ஈடுபடுவது, தகராறுகளை மூட்டுவது, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது ஆகியவை இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதின் மூலம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்தும் எந்த நோக்கமும் அதற்குப் பொருந்தும்.”

முஸ்லிம் சமூகம்பிளவுபடும் அளவுக்கு (அதுவும் ரத்தம் சிந்தப்படும் போது) முஸ்லிம்களிடையே அமைதியின்மையையும் பரபரப்பையும் ஏற்படுத்தக் கூடிய எந்த முயற்சியை மேற்கொள்வதற்கு யாருக்கும் விதிவிலக்குக் கொடுக்கப்படவில்லை. அல்லது முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய முயற்சிகளை யாரும் ஆதரிக்கவும் கூடாது,” என சிப்பாங்கில் தேசிய பாத்வா குழுவின் 99 வது கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பின்னர் அப்துல் சுக்கோர் நிருபர்களிடம் கூறினார்.

ஆகவே அத்தகைய ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்காக மக்களுடைய உயிர்களுக்கு மருட்டலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபாடுமாறு இஸ்லாம்  தன்னை பின்பற்றுகின்றவர்களை ஒரு போதும் கேட்டுக் கொண்டதில்லை என்றார் அவர்.