“என் தாயாரை விட்டு விடுங்கள்” என அஸ்மின் அம்னோவிடம் சொல்கிறார்

கடந்த வார இறுதியில் அம்னோ தொடர்புடைய டிவி3 தொலைக்காட்சியில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தாயார் சே டோம் யாஹாயா பேட்டி அளித்தார். அதற்குப் பதில் அளித்துள்ள அஸ்மின், கறை படிந்த அரசியலுக்குள் தமது தாயாரை இழுப்பதை அம்னோ நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமது தனிப்பட்ட வாழ்க்கை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத அவர், அம்னோவும் அதன் ஊடகங்களும் வளர்த்து வரும் “அசிங்கமான அரசியலை” எதிர்த்துப் போராடப் போவதாக சூளுரைத்தார்.

“என் தாயாருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று ஊடகங்களையும் அம்னோ பின்பற்றுகின்ற கறை படிந்த வெறுப்பை ஊட்டுகிற அரசியலுக்குள் என் தாயாரை கொண்டு வர வேண்டாம் என அம்னோவையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.”

“குடும்ப உறவுகள் உட்பட குடும்ப அமைப்பு போற்றப்பட வேண்டும். ஊடகங்களில் அதனை அவமானப்படுத்தக் கூடாது,” என அவர் இன்று விடுத்த அறிக்கை கூறியது.

தம்மை அஸ்மின் கவனிக்கவில்லை என தமது தாயார் குற்றம் சாட்டியிருப்பதையும் அந்த கோம்பாக் எம்பி மறுத்தார்.

“நான் என் தாயாரையும் தந்தையையும் எப்போதும் நேசிக்கிறேன். என் தாயார் எப்போதும் அல்லாஹ்-வின் பாதுகாப்பில் இருப்பதற்கும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்.”

அம்னோ தொடர்ந்து அவதூறுகளை வீசி வந்தாலும் பிகேஆர் தேர்தல் இயக்குநர் என்னும் முறையில் 13வது பொதுத் தேர்தல் மீது கவனம் செலுத்தப் போவதாகவும் அஸ்மின் சொன்னார்.

கடந்த ஒரு வாரமாக அம்னோ ஊடகங்கள் அஸ்மினுடைய தனிப்பட்ட வாழ்க்கையை குறி வைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

செக்ஸ் வீடியோ ஒன்றில் அஸ்மின் காணப்படுவதாக தகவல்கள் வெளியான பின்னர் அவருடைய தாயார் டிவி3ல் தோன்றி அஸ்மின் குடும்பத்துக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று பல முக்கிய நாளேடுகளில் அவரது பேட்டி வெளியிடப்பட்டது. அஸ்மின் தமது சகோதரியான உம்மி ஹபில்டாவுடன் “பகைமை பாராட்டுவதை” சே டோம் கண்ணீர் மல்க அந்தப் பேட்டியில் விவரித்ததாக அந்த ஏடுகள் குறிப்பிட்டன.

இதனிடையே அஸ்மின் தமது தாயாரை பார்க்கச் செல்ல வேண்டும் என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் அறிவுரை கூறியுள்ளார்.

“அஸ்மின் தமது தாயாரை பார்க்க வேண்டும். காரணம் ஒரு புதல்வர் என்ற முறையில் அது அவருடைய கடமைகளில் ஒன்றாகும்,” என வான் அஜிஸா சொன்னதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.