இன்று சுமார் 60 தேசிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் (NUBE) உறுப்பினர்கள் கோலாலம்பூரில் மேபேங்க் தலைமையகத்தின் முன் பதாகைகளை ஏந்திக்கொண்டும் கொம்போங் ஒலியுடனும் மறியலில் ஈடுபட்டனர்.
மேபேங்க் உறுப்பினர்களுக்கு போனஸ் மற்றும் மேபேங்க் ஊழியர்களுக்கு மட்டுமான அதிகாரிகளற்ற பணியாளர்கள் சங்கம் (In-house union) அமைக்கப்பட்டிருப்பது பற்றிய விவகாரங்களில் மேபேங்கின் நடவடிக்கை குறித்து அந்தத் தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இவ்விவகாரம் ஜூன் 2009 ஆண்டிலிருந்து இன்னும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.
“இவ்விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் (பிரதமர் நஜிப்பை) கடந்த ஆண்டு சந்தித்தோம். ஆனால், இன்னும் தீர்க்கப்படவில்லை”, என்று அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சோலமன் கூறினார்.
இன்று மேபேங்க் தலைமையகத்திற்கு வருகை அளித்த பிரதமர் நஜிப்பின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மறியல் நடத்தப்பட்டது.
மேபேங்கின் புதிய நிறுவன அடையாளத்தை அறிமுகப்படுத்த அங்கு வந்திருந்த பிரதமர் வெளியில் நின்றிருந்த மறியல்காரர்களுடன் தொடர்புகொள்ளவில்லை.
போலீசார் மறியலை நிறுத்தவில்லை. ஆனால் கட்டடத்திற்குள் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு என்யுபியின் செய்தி அறிக்கையை எறிந்து விடுமாறு அதனை வைத்திருந்த செய்தியாளர்களை போலீசார் கேட்டுக்கொண்டர்.
“மேபேங்கின் அடக்குமுறையையும் முரட்டுத்தனத்தையும் பிரதமர் ஆதரிக்கிறாரா என்பதுதான் எங்கள் கேள்வி”, என்று என்யுபியின் பொதுச்செயலாளர் ஜே. சோலமன் கூறினார்.