அம்பிகாவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என திரங்கானு அமைப்புக்கள் விரும்புகின்றன

பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா மீது  அவரது  குடியுரிமை பறிக்கப்படுவது உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோலத்திரங்கானுவில் இன்று கூடிய பல அரசு சாரா அமைப்புக்களின் 400 பேராளர்களும் உள்ளூர் மக்களும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய Gertak என்ற Gerakan Kebangkitan Rakyat அமைப்பின் தலைவர் ரசாலில் இட்ரிஸ் அதனைத் தெரிவித்தார்.

கூட்டரசுத் தலைநகரில் வன்முறையாக மாறிய சட்ட விரோதக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்கு அம்பிகாவே பொறுப்பு என்பதால் அவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

“தேசிய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மருட்டலை ஏற்படுத்தும் யாரையும் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது.”

இந்த நாட்டில் இப்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள ஒற்றுமை சீர்குலைவுக்கும் ஆதாரமாக இருக்கும் அம்பிகாவின் நடவடிக்கையையும் நாங்கள் கண்டிக்கிறோம்.”

“அவர் திருநங்கைகள் என்ற LGBT (lesbian, gay, bisexual and transgender)குழுவுக்கும் வலுவாக ஆதரவு அளித்து வருகிறார்.”

“ஆகவே அவரது குடியுரிமையைப் பறிப்பது உட்பட அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.”

“அவரைப் போன்ற தனி நபர்கள் நாட்டைச் சீரழிப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.

அம்பிகா மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இதே காரணத்துக்கான பெரிய அளவில் கூட்டம் ஒன்றை நடத்த தமது அமைப்பு எண்ணியுள்ளதாகவும் ரசாலி தெரிவித்தார்.

“நாங்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் வெறும் தொடக்கமே. அம்பிகாவுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி  செய்ய அடுத்து பல்வேறு சமூகங்களும் பங்கு கொள்ளும் கூட்டம் ஒன்றுக்கு பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்படும்,” என அவர் மேலும் சொன்னார்.

பெர்னாமா