பெர்சே ஆதரவு- எதிர்ப்புக் குழுக்களுக்கு இடையில் சிறிது நேரம் வாக்குவாதம்

பெர்சே குறித்து போட்டி நிலைகளைக் கடைப் பிடிக்கும் இரண்டு குழுக்களுக்கு இடையில்  இன்று கோலாலம்பூர் புக்கிட் அமானில் அமைந்துள்ள போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் சிறிது நேரம் வாக்குவாதம் நிகழ்ந்தது.

பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனம் குறித்த மகஜர் ஒன்றைச் சமர்பிப்பதற்காக 10 பெர்சே ஆதரவாளர்கள் அங்கு சென்ற போது அது நிகழ்ந்தது.

செகுபார்ட் என அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷாஹ்ரின் தலைமையிலான அந்தக் குழு பிற்பகல் மணி 2.50 வாக்கில் அந்த இடத்தைச் சென்றடைந்தது.

அங்கு அவர்களை 20 பெர்சே எதிர்ப்பு ஆதரவாளர்கள் 20 பேர் எதிர்கொண்டனர்.

போலீசுக்கு ஆதரவு தெரிவிக்கும் தங்களது சொந்த மகஜரை சமர்பிப்பதற்காக அவர்கள் காலையிலிருந்து அங்கு இருந்தனர்.

இரண்டு குழுக்களும் இரண்டு நிமிடங்களுக்கு ஒன்றின் மீது ஒன்று கூச்சல் போட்டுக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அவர்களுக்கு இடையில், மோதல் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான போலீஸ் அதிகாரிகள் சிக்கிக் கொண்டனர்.

இறுதியில் அந்தப் போலீஸ்காரர்கள் இரண்டு குழுக்களையும் தனித்தனியாக பிரிப்பதில் வெற்றி கண்டனர். அடுத்து போலீஸ் படையின் பொது உறவு அதிகாரி துணை ஆணையாளர் ராம்லி யூசோப் இரு குழுக்களிடமிருந்தும் மகஜர்களைப் பெற்றுக் கொண்டார்.