ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் குற்றமற்றவர்கள்! – சட்டத்துறை தலைவருக்கு குறிப்பானை

ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய ஆலோசகர் திரு கணேசன் தலைமையில் அவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு வி.சம்புலிங்கம் மற்றும் திரு கு.பாலகிருஷ்ணன் உட்பட 54  ஹிண்ட்ராப்  மனித உரிமை போராட்டவாதிகள்  மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான, அடிப்படையற்ற வழக்கை மலேசிய சட்டத் துறை தலைவர் (அட்டர்னி ஜெனெரல்) தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய குறிப்பாணையை புத்ரா ஜெயாவில் அமைந்துள்ள சட்ட துறை அலுவலகத்தில் வழங்கினர்.

மலேசிய இந்தியர்களை கேவலமாக சித்தரித்து எழுதப்பட்ட இண்டர்லோக் நாவலை உயர்நிலை ஐந்தாம் படிவ கட்டாய  மலாய் இலக்கிய பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்ட 54 ஹிண்ட்ராப் மனித  உரிமை ஆர்வலர்களை கைது செய்து  அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடியதாக குற்றம் சுமத்தப்பட்டு தற்சமயம் நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டு வருகிறது.

ஹிண்ட்ராப் மற்றும் ஏனைய சமூக ஆர்வலர்களின் தொடர்ந்த கண்டிப்பான நெருக்குதலின் பேரில் இண்டர்லோக் நாவலை  கடந்த ஆண்டு டிசம்பர்  17 ஆம்  நாள்  பாடதிட்டதிலிருந்து கல்வி அமைச்சு நீக்கியது.

கல்வி அமைச்சின் இச்செயல் ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் இண்டர்லோக் எதிர்ப்பு போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் தர்மத்தயுமே பிரதிபலிப்பதாக உள்ளது. நியாத்திற்காக போராடியது எவ்வகையில் சட்டத்திற்கு   புறம்பான செயலாக அமைய முடியும்?

அதற்கும்  மேலாக மலேசிய சட்ட அமைப்பின் பிரிவின் 10 , பொதுமக்கள் நிராயுதபாணிகளாக அமைதியாக ஒன்று கூடி தங்களின் மன உணர்வுகளை வெளிபடுத்த வகை செய்கிறது. எனவே ஹிண்ட்ராப் ஆதரவாளர்களின் மீது பதிவு செய்யபட்டிருக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.

தூய்மையான தேர்தல் வேண்டி நடத்தப்பட்ட  BERSIH  2 .0 மற்றும் BERSIH 3.0  பேரணிகளில் கலந்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பங்கேர்ப்பாளர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது எத்தகைய குற்றச் சாட்டுகளையும் பதிவு செய்யமால் அனைவரையும் விடுதலை செய்தனர். இந்த பேரணிகளுக்கும் இண்டர்லோக் எதிர்ப்பு பேரணிக்கும் இடையே பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை ஆனாலும் பங்கேற்ப்பாளர்கள் மீது அரசு காட்டும் போக்கு முற்றிலும் மாறுபட்டிருப்பத்தின் நியாயம்தான் புரியவில்லை.

ஒருவேளை ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்ட மலேசிய இந்தியர்களுக்காக குரல் கொடுக்க வந்த இந்தியர்களாக இருப்பதால் இந்த பாகு பாடோ என நாம் சந்தேகப்படாமல் இருக்கவும் முடியவில்லை.

இந்த 54 பேர் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை சட்டத்துறை தலைவர் தள்ளுபடி செய்யாவிட்டால் , மலேசியாவில் சிறுபான்மையினருக்கு , சட்ட அமைப்பில் கூறப்பட்டிருக்கும் சம உரிமை மறுக்கபடுவதாகவே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கும். மேலும் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கோட்பாடுகளை மலேசியா கடைப்பிடிக்க தவரியதாகவே கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் நிகழும்.

எனவே ஹிண்ட்ராப் மனித உரிமை ஆர்வலர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் அப்பட்டமான குற்றச்சாட்டுகளை மலேசிய சட்டத்துறை தலைவர் தள்ளுபடி செய்தே ஆகவேண்டும் என்று அந்த குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

TAGS: