தற்போதைய காலக்கட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு இந்நாட்டின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்ட மலேசிய இந்தியர்களின் வரலாறு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என ஆஸ்திரேலிய கல்வியாளர் டாக்டர் கால் வடிவேலோ பெல்லி தெரிவித்தார். (படங்கள்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை செம்பருத்தி.கொம் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை சொன்னார்.
இந்நாட்டு இந்தியர்கள் மலேசிய இந்தியர்களின் வரலாற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நமது நிலை என்ன என்பதை நாம் அறிந்து செயல்படமுடியும் என அவர் கூறினார்.
பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் 40 இலட்சம் இந்தியர்கள் சஞ்சிக் கூலியாக இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 28 இலட்சம் பேர் மீண்டும் தாயகத்திற்கு அனுப்பப்பட்ட வேளையில் மீதமுள்ள 12 இலட்சம் பேர் இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள். இரயில் தண்டவாளங்களும், ரப்பர் தோட்டங்களும் அவர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவை என்பதை உலகறியும் என அவர் தமதுரையின் போது கூறினார்.
சுவராம் மனித உரிமை கழக தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம் மற்றும் முனைவர் நகாராஜன் ஆகியோர் டாக்டர் காலின் உரைக்கு பின்னர் விளக்கமளித்து பேசியதுடன் இந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
சோமா அரங்கத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இக்கலந்துரையாடல் நிகழ்வு இறுதியாக செம்பருத்தி.கொம் ஆசிரியர் ஜீவி காத்தையா அவர்களின் உரையுடன் நண்பகல் 12.30 அளவில் கலந்துரையாடல் முடிவுற்றது.